ADDED : செப் 11, 2026 07:24 PM
சூலூர்: குப்பையை நான்கு விதமாக தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் வீடு, வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சூலூர் ஒன்றியம் காடாம்பாடி ஊராட்சியில்,டீரீம்ஸ் என்.ஜி.ஓ., மற்றும் பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரி, ஆர்.வி.எஸ்., கல்லூரி மாணவ, மாணவியர் சார்பில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திடக்கழிவு மேலாண்மை பயிற்சியாளர் கருணாகரன் பேசுகையில், ‘குப்பையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள நினைக்கும் நாம், வீதியையும், ஊரையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உறுதி எடுக்க வேண்டும். வீடுதேடி வரும் தூய்மை காவலரிடம், குப்பையை நான்கு விதமாக பிரித்து வழங்க பழகி கொள்ளுங்கள். மக்கும், மக்காத குப்பையை ஒன்றாக கொடுத்தால், திடக்கழிவு மேலாண்மை பணிக்கு நெருக்கடியை உண்டாக்கும்’ என்றார்.
முன்னதாக, குப்பையை தரம் பிரித்து கொடுப்பேன், என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
