/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாலையில் பெய்த கனமழையிலும் தீபாவளி ஷாப்பிங்! கடைவீதிகளில் மகிழ்ச்சி வெள்ளம்!
/
மாலையில் பெய்த கனமழையிலும் தீபாவளி ஷாப்பிங்! கடைவீதிகளில் மகிழ்ச்சி வெள்ளம்!
மாலையில் பெய்த கனமழையிலும் தீபாவளி ஷாப்பிங்! கடைவீதிகளில் மகிழ்ச்சி வெள்ளம்!
மாலையில் பெய்த கனமழையிலும் தீபாவளி ஷாப்பிங்! கடைவீதிகளில் மகிழ்ச்சி வெள்ளம்!
ADDED : அக் 21, 2024 03:57 AM

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள், பேன்சி ரகங்கள், காலணி வாங்க நேற்று ஏராளமானோர் திரண்டதால், நகரின் பிரதான சாலைகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் மழை பெய்தபோதும், பொருட்படுத்தாமல் ஷாப்பிங் விறுவிறுப்பாக நடந்தது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும், 10 நாட்களே உள்ளன. இதனால் பெரிய கடைவீதி, ஒப்பணக்காரவீதி, ஆர்.எஸ்.புரம் மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் பர்ச்சேஸ் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று விடுமுறை நாள் என்பதால், காலையில் இருந்தே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. கூட்டம் அதிகம் இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிளாட்பாரக் கடைகளிலும், ஓரளவுக்கு நல்ல விற்பனை இருந்தது. செருப்புக்கடைகள், பேன்சி ஸ்டோர்களில் வளையல், ஜிமிக்கி, கம்மல் வாங்கும் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. எலக்ட்ரானிக் ஷாப்கள், நகைக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளிலும் அதிக கூட்டம் காணப்பட்டது.
இருசக்கர வாகனங்களில், பர்ச்சேஸ் செய்ய வந்தவர்கள் வண்டியை நிறுத்த இடமில்லாமல் தவித்தனர்.
ஜவுளி கடைக்காரர் ஒருவர் கூறுகையில், 'இந்த ஆண்டு மக்கள் தீபாவளி பர்ச்சேசை முன் கூட்டியே துவங்கி விட்டனர். இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு, போலீசார் பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும். இன்னும் 10 நாட்களுக்கு கனமழை இல்லாமல் இருந்தால், இந்த தீபாவளி மகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை' என்றார்.
இந்நிலையில், நேற்று மாலை மழை பெய்தது. கிடைத்த விடுமுறையில் ஷாப்பிங் செய்தாக வேண்டும் என்பதால், மழையை பொருட்படுத்தாமல் மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.