/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மஞ்சள் புக்'கை கவனமாக சரிபாருங்க; தி.மு.க. பூத் கமிட்டியினருக்கு அறிவுரை
/
'மஞ்சள் புக்'கை கவனமாக சரிபாருங்க; தி.மு.க. பூத் கமிட்டியினருக்கு அறிவுரை
'மஞ்சள் புக்'கை கவனமாக சரிபாருங்க; தி.மு.க. பூத் கமிட்டியினருக்கு அறிவுரை
'மஞ்சள் புக்'கை கவனமாக சரிபாருங்க; தி.மு.க. பூத் கமிட்டியினருக்கு அறிவுரை
ADDED : நவ 04, 2025 12:21 AM
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று (நவ. 4) துவங்கி, டிச. 4 வரை நடைபெற இருக்கிறது. வீடு வீடாகச் செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்ட்டுகளும் உடன் செல்ல, ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதனால், அந்தந்த பூத் ஏஜன்ட்டுகளுக்கு கட்சி நிர்வாகிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக, தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தி.மு.க.வில் ஒவ்வொரு பூத்துக்கும் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 100 ஓட்டுக்கான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை ஆதாரமாகக் கொண்டு, பூத் வாரியாக சென்று சரிபார்த்து, ஒவ்வொரு வாக்காளரை பற்றிய தகவல்களையும் சேகரித்து, 'மஞ்சள் புத்தகம்' தயாரித்துள்ளனர். இதை, 'யெல்லோ புக்' என கட்சியினர் அழைக்கிறோம்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் வீடு வீடாகச் செல்லும்போது, மஞ்சள் புத்தகத்தையும் உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே எடுத்து வைத்திருக்கிற தகவல்களையும், தற்போது தேர்தல் ஆணையம் சேகரிக்கும் தகவல்களையும் மிகவும் கவனமாக சரிபார்க்க வேண்டும்.
இரண்டு தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இவ்விஷயத்தில், பூத் நிர்வாகிகள் கவனமாக செயல்படாவிட்டால், சம்பந்த வட்டச் செயலர்களும், பகுதி கழக செயலர்களும் மாவட்ட கழகத்துடன் தகவல் தெரிவித்து, மாற்றுப் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வீட்டில், சொல்லக்கூடிய நிறை குறைகளை பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பயன் அடைந்திருந்தால் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக, சாலை வசதி வேண்டும்; சாக்கடை வசதி வேண்டும்; தெருவிளக்கு வசதி வேண்டும் என அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தால், அதை கேட்டறிந்து, தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

