/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் உலா வரும் நாய்கள்: இரவில் திக்... திக்...
/
சாலையில் உலா வரும் நாய்கள்: இரவில் திக்... திக்...
சாலையில் உலா வரும் நாய்கள்: இரவில் திக்... திக்...
சாலையில் உலா வரும் நாய்கள்: இரவில் திக்... திக்...
ADDED : நவ 11, 2024 04:47 AM

தீராத நெருக்கடி
மதுக்கரை, மரப்பாலத்தில், ரயில்வே சுரங்கப்பாதையில் தினமும் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பல மணி நேரம் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால், பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் பாதிப்படைகின்றனர். பல வருட பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
- விஜயகுமார், மதுக்கரை.
உடைந்த கால்வாய்
பி.என்.புதுார், 74வது வார்டு, சாஸ்திரி வீதி இரண்டில், சாக்கடை கால்வாயின் ஸ்லாப் உடைந்துள்ளது. புதர்மண்டி இருப்பதுடன், சாக்கடை கால்வாயும் சரிவர சுத்தம் செய்யவில்லை. கழிவுநீரும் தேங்கி நிற்பதால் குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- குணசேகரன், பி.என்.,புதுார்.
சாக்கடை அடைப்பு
கோவை மாநகராட்சி, 27வது வார்டு, பீளமேடு, துரைசாமி லே-அவுட்டில், பாதாள சாக்கடை கால்வாயில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதியில் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது.
- வெங்கடபதி, பீளமேடு.
உபகரணங்கள் பழுது
தடாகம் ரோடு, முத்தண்ணன் குளத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளது. பூங்காவிற்கு வரும் குழந்தைகள் விளையாடும் போது விழுவதற்கும், காயம்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
- கோபாலகிருஷ்ணன், தடாகம் ரோடு.
தெருவிளக்கு பழுது
விளாங்குறிச்சி, ஐந்தாவது வார்டு, ரத்தினகிரி நகர், டி நகர் விரிவாக்கத்தில், ' எஸ்.பி - 3 பி-6' என்ற எண் கொண்ட கம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை யில்லை.
- கார்த்திக், விளாங்குறிச்சி.
இருளால் பாதுகாப்பில்லை
கோவை மகாநராட்சி, 49வது வார்டு, பொங்காளியூர், பாலு கார்டன் பகுதியில், கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இருள் காரணமாக இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- கோமதி, பாலுகார்டன்.
குளமாக மாறும் சாலை
ராம்நகர், 67வது வார்டில் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் சாலையில் குளம் போல மழைநீர் தேங்குகிறது. மழை நின்றாலும், பல நாட்களுக்கு சேறும், தண்ணீருமாக சாலை இருக்கிறது. நடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும மிகவும் சிரமமாக உள்ளது.
- சிவக்குமார், ராம்நகர்.
கால்வாயை துார்வாரணும்
டவுன்ஹால், கூட் செட் ரோடு, கோவை தலைமை தபால்நிலையம் அருகே கால்வாய் துார்வாரமல் உள்ளது. கால்வாயில் இரு ஓரங்களிலும் அடர்த்தியாக புதர் செடிகள் வளர்ந்துள்ளன. பிளாஸ்டிக் குப்பைகள் ஆங்காங்கே கால்வாயில் அடைத்து நிற்கிறது.
- சிவபிரகாஷ், டவுன்ஹால்.
அபாயகரமான குழிகள்
வடவள்ளி - தொண்டாமுத்துார் ரோட்டில், பாரம்பரியம் ஓட்டல் முதல் பேரூர் ரோடு சந்திப்பு வரை, சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்கவில்லை. பாதுகாப்பிற்காக தடுப்புகளும் அமைக்கப்படவில்லை. அபாயகரமான குழிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது.
- சுரேஷ்குமார், வடவள்ளி.
மிரட்டும் நாய்கள்
வெள்ளலுார், பட்டணம் பகுதியில் உள்ள காவேரி நகரில் அதிகளவு தெருநாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரை மிரட்டி அச்சுறுத்துகின்றன. குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் பைக்கில் செல்வோரை துரத்தி கீழே விழ வைக்கின்றன.
- நாராயணன், காவேரி நகர்.