/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெடிகுண்டு மிரட்டலால் பயப்படாதீங்க! தைரியம் அளிக்கிறார் போலீஸ் கமிஷனர்
/
வெடிகுண்டு மிரட்டலால் பயப்படாதீங்க! தைரியம் அளிக்கிறார் போலீஸ் கமிஷனர்
வெடிகுண்டு மிரட்டலால் பயப்படாதீங்க! தைரியம் அளிக்கிறார் போலீஸ் கமிஷனர்
வெடிகுண்டு மிரட்டலால் பயப்படாதீங்க! தைரியம் அளிக்கிறார் போலீஸ் கமிஷனர்
ADDED : அக் 16, 2024 12:14 AM

கோவை : ''இ - மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தால் அச்சப்பட வேண்டாம்,'' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சமீப காலமாக இ-மெயில் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள், மால்கள், ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகின்றன.
இவை பெரும்பாலும் வெறும் வதந்தியாக உள்ளது. இதற்கு முன், பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு அச்சப்பட்டு, தங்கள் மொபைலில் இருந்தே, இ - மெயில் அனுப்பிய சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.
அப்படி, சில தினங்களுக்கு முன், கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ -மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பின் நடத்திய சோதனையில், மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த, 8ம் தேதி மீண்டும் ஸ்டேன்ஸ் பள்ளிக்கு மிரட்டல் வந்தது. நேற்று முன் தினம் மீண்டும், நான்கு பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது.
இது குறித்து, நேற்று நமது நாளிதழில், 'புலி வருது புலி வருது' என செய்தி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கு, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகப்படும்படியாக எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. கடந்த 10 நாட்களில், ஓட்டல், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனை என ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல், இ-மெயில் வாயிலாக வந்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் யாராவது, விளையாட்டாக இதை செய்கின்றனரா அல்லது போலீசாரை திசை திருப்ப, ஏதேனும் சதி நடக்கிறதா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த மிரட்டல் சம்பவங்கள் குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''பள்ளி, கல்லுாரி, நிறுவனங்கள் இது போன்ற இ - மெயில் வந்தால் அச்சப்பட வேண்டாம். பதற்றம் அடைய வேண்டாம். வெடிகுண்டை கண்டுபிடித்து, அதை செயலிழக்க வைக்கும் அளவிற்கு, கோவை மாநகர போலீசில் உபகரணங்கள் உள்ளன.
பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் உள்ளன. வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளனர். எனவே, வெடிகுண்டு இருந்தால் கூட, நம்மால் அதை செயலிழக்க செய்ய முடியும். இது போன்ற போலி இ- மெயில்களுக்கு அச்சப்படாமல், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.