/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை திட்ட வீட்டிணைப்பு பெற பணம் கொடுத்து ஏமாறாதீங்க!: நகராட்சியில் செலுத்த மக்களுக்கு அறிவுரை
/
பாதாள சாக்கடை திட்ட வீட்டிணைப்பு பெற பணம் கொடுத்து ஏமாறாதீங்க!: நகராட்சியில் செலுத்த மக்களுக்கு அறிவுரை
பாதாள சாக்கடை திட்ட வீட்டிணைப்பு பெற பணம் கொடுத்து ஏமாறாதீங்க!: நகராட்சியில் செலுத்த மக்களுக்கு அறிவுரை
பாதாள சாக்கடை திட்ட வீட்டிணைப்பு பெற பணம் கொடுத்து ஏமாறாதீங்க!: நகராட்சியில் செலுத்த மக்களுக்கு அறிவுரை
ADDED : ஏப் 25, 2025 11:32 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில், வீட்டிணைப்பு வழங்கும் பணி துவங்கப்பட உள்ளது. இதற்கான பணத்தை நகராட்சியில் மட்டுமே செலுத்த வேண்டும். இடைத்தரகர்கள், ஒப்பந்ததாரர்கள், பணியாளர்கள் என யாரிடமும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்,' என, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாளச்சாக்கடை திட்டம், 170 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 பாதாளச்சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மரப்பேட்டை பள்ளம், மாட்டுச்சந்தை, ராஜாராமன் லே-அவுட்டில் கழிவுநீர் உந்து நிலையங்களும், 18 இடங்களில் கழிவுநீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டன.
மாட்டுச்சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 11.25 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிணைப்புகள், 20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், இத்திட்டம் துவங்கியது முதல், வீடு இணைப்பு வழங்குதல் வரை அனைத்திலும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
அதில், வீட்டு இணைப்புக்கு அதிகப்பட்சமாக பணம் வசூலிப்பதாகவும், முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இணைப்புக்கு எவ்வளவு பணம் வழங்க வேண்டுமென வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதிகளவு பணம் கேட்பதால் பலரும் இணைப்பு பெற தயக்கம் காட்டி வந்தனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நகராட்சி ஒப்பந்தம் விடப்பட்டு, வீட்டிணைப்பு பணிகள் துவங்கப்பட்டன.
பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை, அதிக கட்டணம் வசூலிப்பு போன்ற காரணங்களினால் கடந்தாண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது திருத்திய நிர்வாக அனுமதி பெற்று, ஒப்பந்ததாரருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடைத்தரகர்கள், ஒப்பந்த பணியாளர்கள் யாரிடமும் பணம் கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
நகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்ட வீட்டு கழிவுநீர் இணைப்பு வழங்கும் திட்டம், 2018 - 19ன் கீழ், மண்டலம் ஒன்று முதல் ஐந்து வரை, 20 ஆயிரம் இணைப்புகள் வழங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் பணி உத்தரவுகள் வழங்கப்பட்டன.
மொத்தம் உள்ள, 20 ஆயிரம் இணைப்புகளில், 5,780 எண்ணிக்கை மட்டுமே முடித்து ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தனர். அதனால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, திருத்திய ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
வார்டு வாரியாக ஒப்பந்ததாரரின் பணி எடுத்துள்ள விபரம், அந்தந்த வார்டு வீதிகளில் வைக்கப்படும்.
இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள், நகராட்சி பணியாளர்கள் அணுகும் போது, கட்டட உரிமையாளர்கள், சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை திட்ட வைப்புத்தொகை ரசீது போன்ற நகல்களுடன், நகராட்சியால் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.
வீட்டு உரிமையாளர்கள் கட்டடத்தின் செப்டிக் டேங்க் பயன்படுத்தாமல், கழிப்பிட கழிவுகள், சமையலறை, குளியலறை கழிவுகளை நகராட்சியால் அமைக்கப்படும் இரு சிறு தொட்டிகளிலில் இணைக்க வேண்டும். இவை, நகராட்சி ஒப்பந்ததாரரால் அமைத்து தரப்படும்.
ஆறு மீட்டர் வரையான பணிக்கு வழங்க வேண்டிய தொகை, ஒப்பந்ததாரருக்கு நகராட்சியால் நேரடியாக வழங்கப்படும். அதன்பின், கட்டட உரிமையாளர்களிடம் வீட்டு இணைப்புக்கான டெபாசிட் தொகையுடன் சேர்த்து, 10 தவணைகளில் வசூலிக்கப்படும்.
எனவே, நகராட்சியால் செய்து தரக்கூடிய இந்த பணிக்காக இடைத்தரகர்கள், ஒப்பந்ததாரர்கள், பணியாளர்கள் என யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இது குறித்து ஏதாவது புகார்கள் தெரிவிக்க வேண்டுமென்றால், 73973 92725 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, கூறினார்.