தேங்காய் மார்க்கெட் குறித்த போலி செய்திகளை நம்பாதீங்க! எச்சரிக்கை செய்கிறது விவசாயிகள் நலச்சங்கம்
தேங்காய் மார்க்கெட் குறித்த போலி செய்திகளை நம்பாதீங்க! எச்சரிக்கை செய்கிறது விவசாயிகள் நலச்சங்கம்
UPDATED : செப் 23, 2026 05:43 PM
ADDED : செப் 23, 2026 05:12 PM
பொள்ளாச்சி: சமூக வலைதளங்களில் போலி எஸ்.எம்.எஸ்.,க்களை பரப்பி, தேங்காய், கொப்பரை விலையை குறைக்கும் முயற்சி நடக்கிறது. பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக தவறான தகவல்களை பரப்பும் சமூகவலைதளங்களை முடக்க வேண்டும் என, கொப்பரை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை போன்றவை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தேங்காய் தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது, தேங்காய் வரத்து குறைந்து, கொப்பரை உற்பத்தி இல்லாத சூழலில் மார்க்கெட்டில் அதன் விலையை குறைக்க சமூகவலைதளங்களில் போலி எஸ்.எம்.எஸ்.,க்களை பரப்பி, பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால், கொப்பரை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:
காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி, கொப்பரை விலை நிலவரம் கொப்பரை சாதா கிலோ ரூ.153; கொப்பரை ஸ்பெஷல் ரூ. 155; தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.3,325க்கு விலை கிடைக்கிறது. அதன் அடிப்படையில், தேங்காய் (பச்சை) டன் - ரூ.51 ஆயிரம்; தேங்காய் (கருப்பு) டன் ரூ.55 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கேரளா மாநிலத்தில், திருச்சூர், கொச்சி பகுதிகளில், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி மார்க்கெட்டுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு, காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு, காங்கேயம் மார்க்கெட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கேரளா மாநிலத்தில் சீசன் நேரத்தில் விலை குறைத்தும்; சீசன் இல்லாத நேரத்தில் விலை உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில், தேங்காய் விளைச்சல் குறைந்த நிலையில், கொப்பரை உற்பத்தி இல்லை. இச்சூழலில், விலையை குறைக்கும் முயற்சியில், பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்காக செயல்படும் சில சமூகவலைதளங்களில் போலி விலையை பதிவிடுகின்றனர்.
அதில், சென்னை, கர்நாடகா, ஈரோடு பகுதிகளில் இருந்து வெவ்வேறு பெயர்களில் கொப்பரை மார்க்கெட் நிலவரம் என வெளியிடப்படுகிறது. அவர்கள் தனிச்சையாக விலையை குறைத்து வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
திடீரென விலையை உயர்த்தியம், குறைத்தும், நிலையான விலை இல்லை என்ற நிலை ஏற்படுத்துவதால் கொப்பரை உற்பத்தியாளர்கள், விற்பனை செய்வோர் இரு தரப்பும் பாதிக்கப்படுகிறது.
மேலும், நஷ்டத்தை சந்திக்க விரும்பாத உற்பத்தியாளர்கள், கொப்பரை உற்பத்தியில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சிலர் மட்டை சிப்ஸ் தயாரித்து விற்பனை தொழில்களில் ஈடுபட துவங்கி விட்டனர்.
இதே நிலை நீடித்தால், கொப்பரை உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே, கேரளாவை போன்று, காங்கேயம் தாலுகா அசோசியேஷன் மார்க்கெட்டிலும் காலையில் விலை நிர்ணயம் செய்து, மாலையில் மார்க்கெட் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். காங்கேயம் மார்க்கெட் விலை தான் உண்மையான நிலவரம் என அறிவிக்க வேண்டும்.
பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக தவறான தகவல்களை பரப்பும் சமூகவலைதளங்களை முடக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த குழப்பத்துக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு, கூறினார்.
