/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிக்கடி வந்து செல்ல பஸ் வசதி இல்லையா? மினி பஸ் இயக்க வாய்ப்பு வழங்குகிறது அரசு
/
அடிக்கடி வந்து செல்ல பஸ் வசதி இல்லையா? மினி பஸ் இயக்க வாய்ப்பு வழங்குகிறது அரசு
அடிக்கடி வந்து செல்ல பஸ் வசதி இல்லையா? மினி பஸ் இயக்க வாய்ப்பு வழங்குகிறது அரசு
அடிக்கடி வந்து செல்ல பஸ் வசதி இல்லையா? மினி பஸ் இயக்க வாய்ப்பு வழங்குகிறது அரசு
ADDED : பிப் 04, 2025 11:50 PM

கோவையிலுள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு, சாலை போக்குவரத்து வசதிகளை வழங்கும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை அறிவித்துள்ளது அரசு.
மினி பஸ்சுக்கான புதிய விரிவான திட்டத்தை, அரசு உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், மினிபஸ்சுக்கான கட்டண விகிதங்களும் திருத்தப்பட்டு வரும், மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, மினி பஸ் இயக்கப்படும் அதிகபட்ச துாரம் 25 கி.மீ., ஆகும். குறைந்தபட்சம் 65 சதவீத துாரம் மற்ற பஸ்களின் சேவை இருக்கக்கூடாது. பஸ் புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவை பஸ் சேவை இல்லாத கிராமமாக இருப்பது அவசியம்.
பழைய மினி பஸ் திட்டத்தில், ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள், இப்புதிய திட்டத்தின் கீழ் மாற்றம் செய்து கொள்ளும் விருப்பத்தினை, எழுத்துப்பூர்வமாக அளித்து, பழைய பர்மிட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் புதிய வழித்தடத்தில், பஸ் சேவை இல்லாத பாதை குறைந்தபட்சம் 1.5 கி.மீ தொலைவு இருப்பது அவசியம். பயணியர் இருக்கை எண்ணிக்கை, 25- ஆக இருக்க வேண்டும். மினிபஸ்சின் சக்கர அளவு 390 செ.மீ., குறையாமல் இருப்பது அவசியம்.
பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பஸ் உரிமையாளர்களிடமிருந்து, மினிபஸ் குறித்த புதிய விரிவான திட்டம், வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, அந்தந்த எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
ஏற்கனவே உள்ள மினிபஸ் திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட்டு, மினிபஸ் உரிமையாளர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றும் வகையிலும், தொலைதுாரத்திலுள்ள கிராம மக்கள் பயனடையும் வகையிலும் செயல்படுத்தப்படுகிறது.
அனைவருக்கும் சாலை போக்குவரத்து வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், இப்புதிய மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விகிதங்கள், இதன் இயக்கம் ஆகியவை, வரும் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
- நமது நிருபர் -