/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவர் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்க கூடாது!பார் உரிமையாளர்களுக்கு போலீஸ் தடை
/
டிரைவர் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்க கூடாது!பார் உரிமையாளர்களுக்கு போலீஸ் தடை
டிரைவர் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்க கூடாது!பார் உரிமையாளர்களுக்கு போலீஸ் தடை
டிரைவர் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்க கூடாது!பார் உரிமையாளர்களுக்கு போலீஸ் தடை
ADDED : ஆக 26, 2024 10:22 PM
கோவை:பாருக்கு மது பானம் அருந்த சொந்த வாகனங்களில் வருவோர், டிரைவருடன் வந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என, பார் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் கடந்த சில ஆண்டுகளில், பார்கள், பப், ரெஸ்டோ பார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூருவில் அதிக அளவில் இருந்த இரவு கேளிக்கை விடுதிகள், பப், பார்கள் கோவை பக்கம் திரும்பியுள்ளன.
மாநகரின் முக்கிய பகுதிகளான காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில், இவ்வகை பார்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களும், மது போதையில் வாகனங்களை இயக்கி, விபத்து ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் கூட, ரேஸ்கோர்ஸ் பகுதியில் மதுபோதையில் ஒருவர், காரை ஓட்டி வந்து, இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதி, விபத்து ஏற்படுத்தியுள்ளார். பெரும்பாலும், குடி போதையில் வாகனம் ஓட்டிச்செல்வோரால், அப்பாவி பொது மக்களே, விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
டிரைவருடன் வந்தால் மட்டுமே மது வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து, இந்த அவலத்துக்கு, மாநகர போலீசார் அருமையான தீர்வு காண முன்வந்துள்ளனர்.
இதுதொடர்பாக, கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க, கோவை மாநகர போலீஸ் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 23 முதல் 25ம் தேதி வரை, மதுபோதையில் வாகனங்களை இயக்கிய 178 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுப்பது குறித்து, மாநகரில் உள்ள அனைத்து வகை பார் உரிமையாளர்களுக்கும், ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மதுபானக் கூடங்களுக்கு மது அருந்த, சொந்த வாகனத்தில் வருவோர், டிரைவருடன் வந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும். டிரைவர் இல்லாமல் வந்தால், அவர் மது அருந்திவிட்டு, பாதுகாப்பாக செல்ல, தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும்.
மது அருந்த வருவோர், வேறு ஏதேனும் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனரா என்பதையும், பார் நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும்.
அனைத்து பார் பார்க்கிங்கில், சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். சி.சி.டி.வி., பதிவுகளை, குறைந்த பட்சம் ஒரு மாதமாவது பாதுகாக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைளை பின்பற்றாமல், விபத்து ஏற்பட்டாலோ, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ, சம்பந்தப்பட்ட பார் நிர்வாகத்தின் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பார் உரிமையும் ரத்து செய்யப்படும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், மோட்டார் வாகன சட்டப்பிரிவு 185 படி, முதல் முறை ரூ. 10,000 அபராதம் அல்லது ஆறு மாதம் வரை சிறை தண்டனை, இரண்டாவது முறை ரூ. 15,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இக்குற்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுபவரின் வாகனத்தை முடக்குவதற்கும், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ரத்து செய்வதற்கும் மோட்டார் வாகன சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.