/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான சரக்கு இருப்பில் சறுக்காதீர்கள் விபர அறிக்கை பராமரிப்பு மிக அவசியம்
/
கட்டுமான சரக்கு இருப்பில் சறுக்காதீர்கள் விபர அறிக்கை பராமரிப்பு மிக அவசியம்
கட்டுமான சரக்கு இருப்பில் சறுக்காதீர்கள் விபர அறிக்கை பராமரிப்பு மிக அவசியம்
கட்டுமான சரக்கு இருப்பில் சறுக்காதீர்கள் விபர அறிக்கை பராமரிப்பு மிக அவசியம்
ADDED : மே 10, 2025 02:07 AM

கட்டுமானத்துக்கு பயன் படுத்தப்படும் பொருட்களைகிடங்கில் வைத்து பராமரிப்பது மிக அவசியம். ஆணி, போல்ட், நட்டு, ஸ்குரு அடுத்து சுண்ணாம்பு, சிமென்ட், செங்கல், மணல், மரம், இரும்பு, கதவு, ஜன்னல் இணைப்பு பொருள், எலக்ட்ரிக்கல் சுவிட்ச் போன்றவை வழக்கமாக பயன்படுத்தப்படும் பொருட்களாகவும், கருவிகளாகவும் உள்ளன.
சிறப்பு வேலைக்கு என்று பார்த்தால், குறிப்பிட்ட கருவிகள் மட்டுமே பயன்படும். அதாவது, துளையிடும் கருவிகள், மண் தோண்டும் கருவிகள், சமப்படுத்தும் கருவிகள், கலவை கலக்கும் இயந்திரங்கள், மோட்டார், போக்குவரத்து சாதனம் போன்றவை மட்டுமின்றி, சில அறிவியல் நுட்பமான கருவிகளும் அடங்கும்.
பரிசோதனை செய்யும் கருவிகள், நில அளவை கருவிகள், முகாமுக்கு தேவையான கருவிகள் போன்ற அனைத்தும் சிறப்பு வேலைக்கு மட்டும் பயன்படும் கருவிகள். இப்பொருட்களின் தன்மையை பொறுத்து, திறந்த வெளியிலும், மூடிய கிடங்கிலும் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.
உதாரணத்துக்கு, மிகப் பெரிய இயந்திரங்கள், செங்கல், மணல், கருங்கற்கள், இரும்பு கம்பிகளை திறந்த வெளியேயும், சிமென்ட், சுண்ணாம்பு, ஆணி, போல்ட், நட்டு, மரம், எரிபொருள், பெயின்ட், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிட்டிங்களை மூடிய நிலையில் உள்ள கிடங்குகளிலே பாதுகாப்பான முறையில் இருப்பு வைப்பது அவசியம்.
ஒவ்வொரு பொருட்களும் மற்றும் இயந்திரங்களும், கிடங்கிற்கு வாங்கி வைத்ததற்கான ஆதாரச்சீட்டு இருக்க வேண்டும். அப்போதுதான், அது யாரிடம் இருந்து எப்போது, எந்த அளவு, எந்த முறையில் பெறப்பட்டது என்பது போன்ற விபரத்தை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
ஒவ்வொரு பொருளையும் வாங்கி, கிடங்கில் இருப்பு வைக்கும் முன், அதை நன்றாக பரிசோதனை செய்த பின்னரே வாங்கிவைக்க வேண்டும். அதாவது, சரியான எண்ணிக்கை உள்ளதா, அதன் அளவு, எடை, எல்லாம் குறிப்பிட்டுள்ளபடி உள்ளதா, அது இல்லையெனில் தகுந்த முறையில் புகார்களை பதிவுசெய்ய வேண்டும்.
ஒரு பொருள் கிடங்கில் இருந்து வெளியே கொடுக்கப்படுவதற்கான விபர அறிக்கையை பராமரிக்க வேண்டும். கிடங்கின் பொறுப்பாளர், ஒவ்வொரு மாதமும், 25ம் தேதிக்குள் இருப்பு கணக்கு மற்றும் தேவைப்படும் பொருட்களின் அளவு, அது தேவைப்படும் கால அட்டவணையை உயர் அதிகாரிகளுக்கு தவறாமல் அனுப்பிவைக்க வேண்டும். அப்போதுதான் பின்னாளில் பிரச்னை வராது என்கின்றனர் பொறியாளர்கள்.