ADDED : அக் 16, 2024 09:05 PM

பொள்ளாச்சி : உணவு பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என, தொப்பம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக உணவு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அவர்கள், உடலுக்கு நன்மை தரும் உணவுகள், தீமை தரும் உணவுகள் என்னும் தலைப்பில் பல்வேறு வகையான உணவுப் பொருள்களை எடுத்து வந்திருந்தனர். மேலும், சோளம், கம்பு, ராகி, வரகு, திணை, சாமை போன்ற சிறுதானிய உணவுகள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உடலுக்கு நன்மை தரும் உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.
அதேபோன்று, நுாடுல்ஸ், மைதா பொருள்கள் மற்றும் துரித உணவுகள் என, உடலுக்கு தீமை தரும் உணவுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, உணவுப் பொருட்களையும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர், உணவு வகைகளை, பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.