/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு; செம்மைப்படுத்த நடவடிக்கை
/
வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு; செம்மைப்படுத்த நடவடிக்கை
வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு; செம்மைப்படுத்த நடவடிக்கை
வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு; செம்மைப்படுத்த நடவடிக்கை
ADDED : நவ 21, 2024 09:18 PM
பொள்ளாச்சி ; வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்ற, வாக்காளர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனை செம்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. இப்பணி, இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் விபரங்களை சரிபார்க்கின்றனர். அதன்பின், வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது. இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இதற்காக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜன., மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனிடையே எவரேனும் இறக்க நேரிட்டால், வி.ஏ.ஓ.,விடம் இறப்பு சான்று கோரும் போது, படிவம் - 7 பெற்றுக் கொண்டு, அந்த விபரத்தின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது.
ஆனால், சமீபத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாமில், இரட்டை பதிவு, தொகுதியில் இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்த விபரம் முறையாக செம்மைப்படுத்தப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பட்டியலில் இடம் பெற்றோர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனை செம்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொகுதியில் இடம் பெயர்ந்தோர், இறந்தவர் விபரமும் கண்டறியப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்க, இறப்பு சான்று பெறப்படுகிறது. இனி வரும் நாட்களில், வி.ஏ.ஓ.,விடம் இறப்பு சான்று கோரும்போதே, இறந்தவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, படிவம் -- 7 பெறப்படுவதும் உறுதி செய்யப்படும். தற்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், இறந்தோர் பட்டியலை உறுதி செய்ய சான்று பெறும் பணியில் தீவிரப்படுத்தப்படுவர்.
இவ்வாறு, கூறினர்.