/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமைவழிச் சாலைக்கு ஆட்சேபனை டி.ஆர்.ஓ., விசாரணை 14ல் துவக்கம்
/
பசுமைவழிச் சாலைக்கு ஆட்சேபனை டி.ஆர்.ஓ., விசாரணை 14ல் துவக்கம்
பசுமைவழிச் சாலைக்கு ஆட்சேபனை டி.ஆர்.ஓ., விசாரணை 14ல் துவக்கம்
பசுமைவழிச் சாலைக்கு ஆட்சேபனை டி.ஆர்.ஓ., விசாரணை 14ல் துவக்கம்
ADDED : மே 10, 2025 01:10 AM
அன்னுார் : பசுமை வழிச்சாலைக்கு ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் வரும் 14ம் தேதி அன்னூரில் விசாரணை துவங்குகிறது.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதற்கு தீர்வாக, குரும்ப பாளையத்தில் துவங்கி, அன்னுார் புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடக எல்லை வரை, நான்கு வழி பசுமை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நிலம் கையகப்படுத்த 630 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த மார்ச் மாதம் அன்னுார், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் (நிலம் எடுப்பு) ஆட்சேபனை மனு அளித்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தி தாலுகாவில் கடந்த மாதம் 23ம் தேதி ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அடுத்தகட்டமாக, கோவை மாவட்டத்தில், வரும் 14ம் தேதி விசாரணை துவங்குகிறது. அன்னுார் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுத்தல்)விசாரணை நடத்த உள்ளார். இதற்காக 14, 16, 19, 23 ஆகிய நாட்களில் ஆட்சேபனை தெரிவித்தவர்கள், அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நேரில் ஆஜராகி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கொண்டையம் பாளையம், கரியாம்பாளையம், காரே கவுண்டம்பாளையம், குன்னத்துார், குப்பேபாளையம், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, அன்னூர் பேரூராட்சி, ஒட்டர்பாளையம், அ. மேட்டுப்பாளையம், பசூர், ஆம்போதி உள்ளிட்ட 14 வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொங்கு மண்டல விவசாயிகள் நல சங்கத் தலைவர் முருகசாமி கூறுகையில், ''எந்த காரணத்தைக் கொண்டும் எங்கள் விவசாய நிலத்தை தர மாட்டோம். எங்களது நிலத்திற்குள் கல் நடுவதற்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம்.
ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி பயன்படுத்தலாம். தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.