/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் தட்டுப்பாடால் ரூ.45க்கு கொள்முதல் கர்நாடகா சந்தையில் வரத்து இல்லை
/
இளநீர் தட்டுப்பாடால் ரூ.45க்கு கொள்முதல் கர்நாடகா சந்தையில் வரத்து இல்லை
இளநீர் தட்டுப்பாடால் ரூ.45க்கு கொள்முதல் கர்நாடகா சந்தையில் வரத்து இல்லை
இளநீர் தட்டுப்பாடால் ரூ.45க்கு கொள்முதல் கர்நாடகா சந்தையில் வரத்து இல்லை
ADDED : ஏப் 01, 2025 10:18 PM
பொள்ளாச்சி,;கர்நாடகா மாநிலத்தில் உள்ள, பெரிய இளநீர் சந்தையில் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, வடமாநில வியாபாரிகள் பொள்ளாச்சி இளநீரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பொள்ளாச்சி பகுதியில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை குட்டை ரகம் மற்றும் வீரிய ரக தென்னை மரங்கள் இளநீர் உற்பத்திக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவ., முதல், ஜன., வரை இளநீர் மகசூல் அதிகமாகவும், பனிப்பொழிவு, மழை உள்ளிட்ட காரணங்களால் விற்பனை மந்தமாகவும் இருக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இளநீர் மகசூல் குறைந்து இருப்பதால், அதிக விலை கிடைக்கும்.
மேலும், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி, 20க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இளநீர் அனுப்பப்படுகிறது.மதிப்புக்கூட்டப்பட்டு, 'பாக்கெட்'களில் பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அனுப்பப்படுகின்றன.
உர மேலாண்மை மற்றும் சிறந்த பராமரிப்பு செய்தால் ஒரு மரத்துக்கு, ஆண்டுக்கு 250 இளநீர் வரை மகசூல் கிடைப்பதால், செலவுகள் போக, போதிய லாபமும் கிடைத்தது.இந்நிலையில், தென்னை மரங்களை தாக்கும் நோய்கள், வெள்ளை ஈ போன்ற காரணங்களால், மகசூல் பாதியாக குறைந்தது.
கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், ஒரு நாளுக்கு, ஐந்து லட்சம் இளநீர் மகசூல் கிடைத்தது. தற்போது மகசூல் வெகுவாக குறைந்துள்ளது.
வடமாநிலங்களில், வறட்சி அதிகரித்துள்ள நிலையில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப இளநீர் வரத்து இல்லாததால், அனுப்ப முடியாத சூழல் உள்ளது.
ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
பொள்ளாச்சி இளநீர், வடமாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பப்படுகின்றன. தற்போது, கர்நாடகா மாநிலம் கோலார்பேட்டை, சாம்ராஜ், மத்துார் உள்ளிட்ட இளநீர் விற்பனை சந்தைகள் உள்ளன. இதில், பெரிய சந்தையான மத்துாரிலேயே இளநீர் வரத்து குறைந்துள்ளது.
அம்மாநிலத்தில் தென்னையில் நோய் தாக்குதல், தரம் குறைவு காரணமாக இளநீர் வரத்து குறைந்துள்ளது.இதனால், வடமாநில வியாபாரிகள், பொள்ளாச்சி இளநீரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், அவர்களது தேவைக்கேற்ப இப்பகுதியில் இளநீர் இல்லாததால் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.கடந்தாண்டு, தினமும் மூன்று லட்சம் இளநீர், வரத்து இருந்தது. கடந்த மாதம் கூட, இரண்டு லட்சம் இளநீர் வரத்து இருந்தது. தற்போது, 1.5 லட்சம் இளநீர் மட்டுமே வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அதிலும், செவ்விளநீர் கடந்த, எட்டுமாதங்களாக உற்பத்தியே இல்லை. கடந்தாண்டு பருவமழை பொய்த்தது; நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் வரத்து குறைந்தது.
தற்போது, ஒரு இளநீர் தோட்டங்களில், 45 ரூபாய், ஒரு டன் இளநீர், 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரத்து குறைவால் மேலும் விலை உயரும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினார்.