ADDED : பிப் 20, 2025 11:44 PM
கோவை; தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் மாநிலம் முழுவதும் திறனறி போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், கோவை மண்டல அறிவியல் மையத்தில் ஓவியம், கட்டுரை, வினாடி-வினா போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தது.
முதல் நாளில், 'காலநிலை மாற்றம்' எனும் தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இரண்டாம் நாளில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது குறித்த தலைப்பிலான கட்டுரை போட்டி நடந்தது. மூன்றாம் நாளில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல் குறித்த வினாடி-வினா போட்டி நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த திறனறி போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளுடன், 10 நபர்களுக்கு ஆறுதல் பரிசும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக, மண்டல அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.