/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம் வரும், 20ல் தண்ணீர் திறக்க கோரிக்கை
/
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம் வரும், 20ல் தண்ணீர் திறக்க கோரிக்கை
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம் வரும், 20ல் தண்ணீர் திறக்க கோரிக்கை
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம் வரும், 20ல் தண்ணீர் திறக்க கோரிக்கை
ADDED : நவ 08, 2024 11:16 PM

பொள்ளாச்சி; 'ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு வரும், 20ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்,' என ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆழியாறு பாசனப்பகுதிகளில், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு பீடர் கால்வாய் ஆகிய பாசனப்பகுதிகளில், மொத்தம் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டுதோறும் பாசனத்துக்கு, 'அ' மண்டலம், 'ஆ' மண்டலம் என பிரிக்கப்பட்டு கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்தாண்டு பருவமழை பற்றாக்குறையால், பாசனத்துக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிலை பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால், கடந்த சில மாதங்களாக அணை முழு கொள்ளளவில் காட்சியளிக்கிறது. பருவமழையால் பாசனத்துக்கு தடையின்றி நீர் கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவது குறித்து, ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு கலந்தாய்வு கூட்டம், பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.
ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் தலைமை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, தண்ணீர் வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.
பொள்ளாச்சி கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய், சேத்துமடைக்கால்வாய்களில், 'அ' மண்டல பாசனத்துக்கு வரும், 20ம் தேதி முதல், 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு, 2,138 மி.க., அடிக்கு மிகாமல் நீர் வழங்கி அரசுக்கு பரிந்துரை செய்து வழங்க வேண்டும்.
மேலும், வேட்டைக்காரன்புதுார் கால்வாயில் உலக வங்கி உதவியுடன் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, இந்தாண்டு மட்டும் வேட்டைக்காரன்புதுார், 'ஆ' மண்டல பாசனத்துக்கு டிச., மாதம் முதல் உரிய இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட, அரசுக்கு தனியே பரிந்துரை செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
அதிகாரிகளும், அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.