/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு கட்சிகளின் பதிவு ஏன் ரத்து செய்யக்கூடாது; விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
/
இரு கட்சிகளின் பதிவு ஏன் ரத்து செய்யக்கூடாது; விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இரு கட்சிகளின் பதிவு ஏன் ரத்து செய்யக்கூடாது; விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இரு கட்சிகளின் பதிவு ஏன் ரத்து செய்யக்கூடாது; விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ADDED : ஆக 14, 2025 08:57 PM

கோவை: கோவை முகவரியில் செயல்பட்ட இரு அரசியல் கட்சிகள், ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாததால், பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் கேட்டு, கட்சி பொறுப்பாளர்கள், 26ல் நேரில் ஆஜராக, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 29ஏ விதியின் கீழ், அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. அக்கட்சிகளுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 13ஏ-ன் கீழ் வருமான வரி விலக்கு, பொது சின்ன ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுகிறது. 2019 முதல் ஆறு ஆண்டுகளாக சில கட்சிகள் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல் தவிர்த்து வந்துள்ளன. அக்கட்சிகளின் பதிவை ரத்து செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் காரணத்தை கேட்டறியும் வகையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது.
கோவையில், கல்வீரம்பாளையம் நால்வர் நகரில் செயல்படும், 'அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்' மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் கற்பகம் பல்கலை எதிரே செயல்படும் 'தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி' ஆகிய இரு கட்சிகளும், 2019 முதல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை என கண்டறிந்துள்ளது.
இவ்விரு கட்சியினரும் தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்கும் வகையில், சென்னையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக, அக்கட்சிகளின் தலைமை பொறுப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்ததும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரியால் அறிக்கை அனுப்பப்படும். இறுதி முடிவை ஆணையம் பிறப்பிக்கும், என, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.