/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் பணி: பராமரிக்க ஆளில்லாமல் குழந்தைகள் தவிப்பு
/
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் பணி: பராமரிக்க ஆளில்லாமல் குழந்தைகள் தவிப்பு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் பணி: பராமரிக்க ஆளில்லாமல் குழந்தைகள் தவிப்பு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் பணி: பராமரிக்க ஆளில்லாமல் குழந்தைகள் தவிப்பு
ADDED : நவ 14, 2025 12:01 AM

கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடந்து வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு மைய அலுவலர்கள், பில் கலெக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் போன்றவர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வினியோகித்து வருகின்றனர். இதனால், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு மைய ஊழியர்களின் வழக்கமான பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் வினியோகிக்கச் செல்லும் பணியாளர்கள், அருகாமையில் உள்ள மையத்தினரிடம் பொறுப்பை கொடுத்து, குழந்தைகளை கவனித்துக் கொள்ளச் சொல்கின்றனர். ஒரு உதவியாளரால் அனைத்து அங்கன்வாடிகளுக்கு வரும் குழந்தைகளையும் கவனிக்க முடிவதில்லை. குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
உதாரணத்துக்கு, 26வது வார்டு பீளமேடு பகுதியில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் ஆறு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்க நான்கு அலுவலர்கள் நேற்று படிவம் வினியோகிக்கச் சென்று விட்டனர்.
இரண்டு மையத்தை பூட்டி விட்டு, குழந்தைகளை மற்றொரு மையத்தில் அமர வைத்திருந்தனர். ஒவ்வொரு மையத்திலும் தலா 25 முதல் 50 குழந்தைகள் வரை பராமரிக்கப்படுகின்றனர். உதவியாளர்களே அவர்களை கவனித்துக் கொண்டனர். கல்வி கற்பித்தல் பணி நடைபெறவில்லை.
பெற்றோருக்கு தெரியப்படுத்தும் விதமாக, ஒரு மையத்தின் கதவில், 'எஸ்.ஐ.ஆர். பணிக்குச் சென்றிருக்கிறேன்' என, அங்கன்வாடி பணியாளர் ஒருவர், எழுதி வைத்துச் சென்றிருந்தார்.
வழக்கமாக காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை அங்கன்வாடி செயல்படும். குழந்தைகளை கவனிக்க போதிய ஊழியர்கள் இல்லாததால், பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அறிவுறுத்தியதால், மதியம் 1 மணிக்கே வந்து, அழைத்துச் சென்றனர்.
இதே பிரச்னை, 27வது வார்டு பீளமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில் செயல்படும் இரண்டு அங்கன்வாடி மையங்களிலும் காணப்பட்டது. இரண்டு மைய பொறுப்பாளர்களும், படி வம் வினியோகிக்கச் சென்றிருந்ததால், ஒரே ஒரு உதவியாளர் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார். இப்பிரச்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான அங்கன்வாடிகளிலும் காணப்படுகிறது.
பெற்றோர் சிலர் கூறுகையில், 'வழக்கமாக மாலை 4 மணிக்கே வந்து குழந்தையை அழைத்துச் செல்வோம். கணக்கெடுப்பு படிவம் கொடுக்கச் செல்ல இருப்பதால், குழந்தைகளை அழைத்துச் செல்ல கூறினர். அதனால், சீக்கிரமாகவே வந்து அழைத்துச் செல்கிறோம்' என்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக, 26வது வார்டு கவுன்சிலர் (ம.தி.மு.க.,) சித்ரா கூறுகையில், ''ஒவ்வொரு அங்கன்வாடிக்கும் தலா 50 குழந்தைகள் வரை வருகின்றன. எப்போதும்போல் குழந்தைகளை பெற்றோர் விட்டுச் செல்கின்றனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு அங்கன்வாடி பொறுப்பாளர்கள் சென்று விடுகின்றனர்.
''அதனால், குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் விளையாடி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
''ஒரு குழந்தைக்கு அடிபட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கின்றனர். அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

