ADDED : நவ 01, 2026 06:08 PM

அன்னுார்: கோவை அருகே சார்ஜ் போடப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீயில் கருகியது.
அன்னுாரில், கோவை சாலையில் இரு சக்கர வாகன ஷோரூம் உள்ளது. ஷோரூமை ஒட்டி உள்ள ஷெட்டில், மெக்கானிக் காமேஸ்வரன், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். நேற்று (அக்.,31) இரவு, எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் போட்டு வைத்துள்ளார். இன்று (நவ.,1) காலை 5:30 மணிக்கு வீட்டுக்குள் புகை மூட்டம் உருவாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மனைவி, குழந்தைகளை எழுப்பி, வீட்டுக்கு வெளியே அழைத்து வந்த காமேஸ்வரன், ஸ்கூட்டரை சார்ஜரில் இருந்து கழற்றி வெளியே கொண்டு வந்து நிறுத்தினார்.
சிறிது நேரத்தில், ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய துவங்கியது. அன்னுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இருப்பினும், ஸ்கூட்டரின் பெரும் பகுதி எரிந்து கருகியது. அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
