/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் துவக்கம்: மின் பயன்பாடு கணக்கீடு குறித்து அறிவிப்பு
/
மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் துவக்கம்: மின் பயன்பாடு கணக்கீடு குறித்து அறிவிப்பு
மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் துவக்கம்: மின் பயன்பாடு கணக்கீடு குறித்து அறிவிப்பு
மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் துவக்கம்: மின் பயன்பாடு கணக்கீடு குறித்து அறிவிப்பு
ADDED : செப் 26, 2025 09:22 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கோட்டத்தில், அகிலாண்டபுரம் மற்றும் ஜோதிநகரில் புதிதாக பிரிவு அலுவலகங்கள் துவக்கப்படுகின்றன.இதுகுறித்து, மின்வாரிய பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் ராஜா அறிக்கை:
பொள்ளாச்சி கோட்டத்தில் மின் நுகர்வோர்கள் வசதிக்காக புதிதாக அகிலாண்டபுரம் மற்றும் ஜோதிநகர் பிரிவு அலுவலகங்கள், வரும், 29ல், துவக்கப்படுகிறது.அதன்படி, ரங்கசமுத்திரம் பிரிவு அலுவலகத்தில் இருந்து, வக்கம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, அகிலாண்டபுரம்; டி.கோட்டாம்பட்டி பிரிவு அலுவலகத்தில் இருந்து நாயக்கன்பாளையம்; ஜமீன்ஊத்துக்குளி பிரிவு அலுவலகத்தில் இருந்து குஞ்சிபாளையம் போன்ற பகிர்மானங்கள் பிரிக்கப்பட்டு, அகிலாண்டபுரம் பிரிவு அலுவலகத்தில் சேர்க்கப்படுகிறது.
இந்த பகிர்மானங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் இனி வரும் காலங்களில், மாதாந்திர மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கு அகிலாண்டபுரம் பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும்.
இதேபோல, ரங்கசமுத்திரம் பிரிவு அலுவலகத்தில் இருந்து காந்திபுரம், ஜோதிநகர், மோதிராபுரம்; கிராமியம் பொள்ளாச்சி அலுவலகத்தில் இருந்து மாக்கினாம்பட்டி ஆகிய பகிர்மானங்கள் பிரிக்கப்பட்டு, ஜோதிநகர் பிரிவு அலுவலகத்தில் சேர்க்கப்படுகிறது.
இந்த பகிர்மானங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், இனி வரும் காலங்களில் மாதாந்திர மின் கட்டணம் மற்றும் பிற சேவைகளை, ஜோதிநகர் பிரிவு அலுவலகம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், கிராமியம் பொள்ளாச்சி அலுவலகத்தில் இருந்து பாலமநல்லுார் பகிர்மானம் பிரிக்கப்பட்டு ரங்கசமுத்திரம் பிரிவு அலுவலகத்தில் இணைக்கப்படுகிறது. இந்த பகிர்மானத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள், ரங்கசமுத்திரம் பிரிவு அலுவலகம் வாயிலாக மாதாந்திர கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அங்கலக்குறிச்சி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் தேவானந்த் அறிக்கை வருமாறு:
அங்கலக்குறிச்சி மின்வாரிய கோட்டத்தில், மேற்கு தேவனுார்புதுார், கஞ்சம்பட்டி மற்றும் தென்சங்கம்பாளையம் பிரிவு அலுவலகத்தில் உள்ள பகிர்மானங்கள், மின்நுகர்வோர் வசதிக்காக பிரிக்கப்பட்டு, புதிதாக வடக்கு தேவனுார்புதுார் பிரிவு அலுவலகம் துவக்கப்படவுள்ளது.
அவ்வகையில், பொன்னேகவுண்டனுார் மின்பகிர்மானத்தில், இரட்டை படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது, வடக்கு தேவனுார்புதுார் பிரிவு அலுவலகம் துவங்கப்படவுள்ளதால், தற்போது ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படும்.
அதன்படி, இம்மாதம் கணக்கீடு பணிகள் மேற்கொள்ளப்படவும் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள மின்நுகர்வோர், மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து, உரிய காலத்துக்குள் மின் கட்டண தொகையை செலுத்த வேண்டும். அதன்வாயிலாக, மின் துண்டிப்பு நடவடிக்கையும் தவிர்க்கலாம்.
இனிவரும் நாட்களில், இந்த மின் பகிர்மானங்களில் ஒற்றைப்படை மாதத்திலேயே கணக்கீடு செய்யப்படும். மேலும், கஞ்சம்பட்டி பிரிவுக்கு உட்பட்ட தென்குமாரபாளையம் பகிர்மானத்தில் இருந்து டிரான்ஸ்பார்மர் எண் எஸ்.எஸ் 11, 12, 13 மற்றும் 41ல், 32 மின் இணைப்புகள், புதிதாக துவக்கப்பட உள்ள வடக்கு தேவனுார்புதுார் பிரிவுக்கு உட்பட்ட வி.புளியம்பட்டி பகிர்மானத்துடன் இணைக்கப்பட உள்ளது.
இந்த இணைப்புகள் ஏற்கனவே ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது, இரட்டைப்படை மாதத்திற்கு மாற்றப்படுவதால், இம்மாதத்தில் ஒரு மாத கணக்கீட்டு செய்யப்படும். தொடர்ந்து, இரட்டைப்படை மாதத்திலேயே கணக்கீடு செய்யப்படவும் உள்ளது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.