/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
/
மின் வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 02, 2025 10:08 PM

பொள்ளாச்சி; 'ஐந்து நட்சத்திர குறியீடு உள்ள மின் சாதனங்களைப் பயன்படுத்துவீர்,' என, மின் சிக்கன வார விழாவையொட்டி நடந்த பேரணியில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், மின் சிக்கனம், மின்விபத்து, மின் திருட்டு தொடர்பான விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் மின் சிக்கன விழிப்புணர்வு வார விழா நடத்தப்படுகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சி மின் கோட்டத்தில் மின் சிக்கன வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.இதில், மின்வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பல்லடம் ரோட்டில் துவங்கிய பேரணியை செயற்பொறியாளர் ராஜா, தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.
அப்போது, அனைவரும், 'சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்துவீர்; மின்சாரம் சேமிப்பீர்', 'ஐந்து நட்சத்திர குறியீடு உள்ள மின் சாதனங்களைப் பயன்படுத்துவீர்', என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
பேரணி, நியூஸ்கீம் ரோடு வழியாக காந்தி சிலையை அடைந்தது. அங்கு, பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஒலிப்பெருக்கி வாயிலாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.