/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனமா இருங்க! மக்களுக்கு வனத்துறை அறிவுரை
/
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனமா இருங்க! மக்களுக்கு வனத்துறை அறிவுரை
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனமா இருங்க! மக்களுக்கு வனத்துறை அறிவுரை
யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு.. கவனமா இருங்க! மக்களுக்கு வனத்துறை அறிவுரை
ADDED : நவ 25, 2024 10:44 PM

வால்பாறை: வால்பாறை நகரம் மற்றும் எஸ்டேட் பகுதியில், யானைகள், சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
குறிப்பாக, யானைகள் அதிக அளவில் எஸ்டேட் பகுதியில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனிக்கூட்டமாக முகாமிட்டு தொழிலாளர்களின் வீடுகளையும், அப்பகுதியில் உள்ள மளிகை மற்றும் ரேஷன் கடைகளையும் சேதப்படுத்துகின்றன. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களும் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை நரை ஒட்டியுள்ள சவராங்காடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள ஒற்றையானை நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு கக்கன் காலனி பகுதிக்குள் நுழைந்தது. அதன்பின் அங்குள்ள ஆற்றோரப்பகுதி வீடுகளின் கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தியதோடு, உத்ரகாளியம்மன் கோவில் ெஷட்டை சேதப்படுத்தியது. மக்கள் திரண்டு சென்று ஒரு மணி நேரத்திற்கு பின் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், தொழிலாளர்கள் மிகவும் கவனமாக பணிக்கு செல்ல வேண்டும்.
குறிப்பாக, காலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்காக செல்லும் போது, தேயிலை செடிக்கு கீழ், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் பதுங்கியுள்ளதா என கண்டறிந்த பின், பணியில் ஈடுபட வேண்டும். குறுக்கு வழித்தடத்தில் தொழிலாளர்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
குடியிருப்பு பகுதியில், வாழை, பழ வகைகள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று, தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் கூட்டமாக நுழைந்தால், அவற்றை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், யானைகள் மிரட்டு செய்வதறியாது ஓடி, சேதப்படுத்தும். எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்தால், தேயிலை பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது.
இவ்வாறு, கூறினர்.