/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி போலாமா? நினைவுகளை பகிரும் சுற்றுலா பயணியர்
/
டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி போலாமா? நினைவுகளை பகிரும் சுற்றுலா பயணியர்
டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி போலாமா? நினைவுகளை பகிரும் சுற்றுலா பயணியர்
டாப்சிலிப்பில் மீண்டும் யானை சவாரி போலாமா? நினைவுகளை பகிரும் சுற்றுலா பயணியர்
ADDED : அக் 31, 2024 09:45 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில், நான்கு ஆண்டுகளாகியும், யானை சவாரி துவங்கப்படவில்லை. இதனால், குழந்தைகள் யானை சவாரி செய்ய ஆசையுடன் வந்தாலும், ஏமாற்றமடையும் நிலை உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதி சுற்றுலா தலமாக உள்ளது. வனப்பகுதியில், மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளி நாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
கோடை காலங்களில், விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் 'விசிட்' அடிக்க சுற்றுலா பயணியர் தவறுவதில்லை. சுற்றுலா பயணியர் டாப்சிலிப் வனத்தை சுற்றி பார்ப்பதற்குஏதுவாக, வனத்துறை சார்பில், தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மூங்கிலால் குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மூலிகை பண்ணை, வனவிலங்குகள் குறித்த புகைப்பட விளக்க அரங்கம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. கோழிகமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணியர் அருகே உள்ள பரம்பிக்குளம் வனப்பகுதிக்குள் 'விசிட்' அடிக்கவும் தவறுவதில்லை.
டாப்சிலிப் பகுதியில், விடுதிகளுக்கு அருகே உள்ள புல் தரையில் அதிகாலையில் துள்ளி விளையாடும் மான்கூட்டம் மனதிற்கு நிம்மதியளிப்பதால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
யானை சவாரி
யானை சவாரி திட்டம் சுற்றுலா பயணியரை கவர்வதற்காக துவங்கப்பட்டது. இதற்காக கும்கி யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 60 வயதிற்கு கீழ் உள்ள யானைகள் இதற்காக பழக்கப்படுத்தப்பட்டு, யானை சவாரி மேற்கொள்ளப்பட்டது.
யானை மீது சுற்றுலா பயணியர் சவாரி செல்வதற்கு ஏற்ற வசதியும்; யானைப்பாகன் கூட செல்லும் வசதியும் செய்து தரப்பட்டது. குறிப்பிட்ட துாரத்திற்கு சுற்றுலா பயணியரை ஏற்றிச் சென்று சவாரி மேற்கொள்ள, நான்கு பேருக்கு 800 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இத்திட்டம் சுற்றுலா பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
டாப்சிலிப் வரும் 'குட்டீஸ்'கள் முதல், பெரியவர்கள் வரை ஜாலியாக, யானை மேலே அமர்ந்து வனத்தை சுத்தி பார்க்கும் ஆசையில் குவிந்தனர். இதற்காகவே, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்தது. இந்நிலையில், கடந்த, 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, டாப்சிலிப்பில் யானை சவாரி நிறுத்தப்பட்டது. அதன்பின், அனுமதி கிடைக்காததால், மீண்டும் துவங்கப்படவில்லை. இதனால், ஆசையுடன் வரும் சுற்றுலா பயணியர், ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.
யானை சவாரி நடந்த இடம் தற்போது, அடையாள சின்னமாக மாறியுள்ளது. அந்த இடமே பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. ஆர்வமாக வரும் சுற்றுலா பயணியர், யானை சவாரி நடந்த இடத்தை மட்டுமே பார்த்து, நினைவுகளை பகிர்ந்து கொண்டு செல்கின்றனர்.