/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் உலா வரும் யானை: எச்சரிக்கும் வனத்துறை
/
ரோட்டில் உலா வரும் யானை: எச்சரிக்கும் வனத்துறை
ADDED : டிச 15, 2024 11:15 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சின்னார்பதி மலைவாழ் குடியிருப்பு மற்றும் ஆழியாறு ரோட்டில் வலம் வரும் யானையை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்குள்ள நீர்தேக்கங்கள், அணைகள், கோவில்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனவிலங்குகளை காண அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.
சுற்றுலா பயணியர் வருகை காரணமாக, வனம் ஒட்டிய சாலையில், வனத்துறை வாயிலாக ஆங்காங்கே, விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக 'சில்லிக்கொம்பன்' என வனத்துறையால் அழைக்கப்படும் ஆண் யானை ஒன்று, ஆழியாறு அடுத்த சின்னார்பதி மலைவாழ் குடியிருப்பு பகுதியில் உலா வருகிறது.
அங்குள்ள கூந்தல்பனை மரங்களை ஒன்றை வேரோடு சாய்த்து ருசி பார்த்தும் வருகிறது. அவ்வப்போது, ரோட்டை மறித்தும் நிற்கிறது.
இதனால், பாதுகாப்பு கருதி, யானையை அடந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வேட்டைத் தடுப்புக்காவலர்களை உள்ளடக்கிய வனக்குழுவினர், தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரோட்டின் நடுவே யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதற்கேற்ப வாகனங்கள் கடந்த செல்ல அனுமதித்தும் வருகின்றனர்.
வனத்துறையினர் கூறியதாவது: நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு, ரோட்டை மறித்து யானை நின்றதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானை, வனப்பகுதிக்குள் சென்ற பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
யானையைக் கண்காணிக்க, சுழற்சிமுறையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மலைப்பாதையில் இரவு நேரத்தில் சுற்றுலாபயணியர், கவனமாக செல்ல வேண்டும்; ரோட்டோரத்தில் யானையைக் காண முற்பட்டால், செல்பி மற்றும் போட்டோ எடுக்கக்கூடாது என, சோதனைச் சாவடியிலேயே வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

