/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் குட்டி! சிசு இருந்ததே தெரியாமல் 4 நாட்கள் சிகிச்சையளித்த வனத்துறை
/
கோவையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் குட்டி! சிசு இருந்ததே தெரியாமல் 4 நாட்கள் சிகிச்சையளித்த வனத்துறை
கோவையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் குட்டி! சிசு இருந்ததே தெரியாமல் 4 நாட்கள் சிகிச்சையளித்த வனத்துறை
கோவையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் குட்டி! சிசு இருந்ததே தெரியாமல் 4 நாட்கள் சிகிச்சையளித்த வனத்துறை
ADDED : மே 22, 2025 04:02 AM

கோவை; கோவையில், உயிரிழந்த பெண் யானை, 15 மாதம் கர்ப்பமாக இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. வயிற்றுக்குள் சிசு இருப்பது கூட தெரியாமல், வனத்துறையினர் நான்கு நாட்களாக சிகிச்சை அளித்து வந்தது, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில், 17ம் தேதி மாலை, உடல் நலக்குறைவால், ஒரு பெண் யானை கீழே விழுந்தது. அதன் குட்டி யானை சுற்றி வந்தது. கும்கி வந்தவுடன் வனத்துக்குள் சென்று மறைந்தது. நான்கு நாட்களாக பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
நேற்று முன்தினம் மாலை, 'ஹைட்ரோ தெரபி' என்ற சிகிச்சை அளித்தபோது, உயிரிழந்தது. நேற்று காலை, வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர், பிரேத பரிசோதனை செய்தனர். யானையின் வயிற்றில், 15 மாத சிசு உயிரிழந்த நிலையில் இருந்ததை பார்த்ததும், வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தாய் யானை சாணத்தில், ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள் கலந்திருந்தன. பரிசோதனைக்கு பின், அதே பகுதியில், குழிதோண்டி, யானையின் உடல் புதைக்கப்பட்டது.
காப்பாற்ற முடியாதது ஏன்?
வனத்துறையினர் கூறுகையில், 'கோவை வனக்கோட்டத்தில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, யானைகள் உயிரிழப்பது சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. அவை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது, அதன் உடலில் மாற்றம் தெரிவதில்லை. தொற்றின் பாதிப்பு முற்றி, நடக்கக் கூட முடியாமல் படுத்து விடுகின்றன. அவற்றை காப்பாற்ற சிகிச்சை அளிக்கிறோம். இருப்பினும், உள்உறுப்புகளை நோய் தொற்று செயலிழக்க வைப்பதால், உயிரிழக்கின்றன' என்றனர்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'பெரும்பாலான பெண் யானைகள், முதல் குட்டி ஈன்றதும், 3 முதல், 4 ஆண்டுகள் கழித்தே, அடுத்த குட்டி ஈனும் என்பது, அனைவருக்கும் தெரியும். உயிரிழந்த பெண் யானையின் முதல் குட்டிக்கு, 2 முதல் 3 வயது வரை இருக்கும். யானை கர்ப்பமாக இருந்தது வனத்துறையினருக்கு தெரியாமல் போனது அதிர்ச்சியாக உள்ளது. கர்ப்பமாக இருந்த யானைக்கு, சரியான சிகிச்சை கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது' என்றனர்.