வீடுகளை பந்தாடிய யானைகள் விரட்டியடித்த வனத்துறையினர்
வீடுகளை பந்தாடிய யானைகள் விரட்டியடித்த வனத்துறையினர்
ADDED : செப் 14, 2026 07:42 PM
வால்பாறை: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானைகள் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக சிவாகாப்பி, தாய்முடி, கருமலை, அக்காமலை, சவராங்காடு உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் உலா வருகின்றன.
பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள துண்டு சோலையில், முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் பகுதியில், நள்ளிரவில் முகாமிட்ட இரண்டு யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் எலெக்டீரிசியன் சாம்ஜெபக்குமார் என்பவரின் வீட்டின், கதவு, ஜன்னல்களை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் விடிய, விடிய குடியிருப்பு பகுதியில் முகாமிட்டதால், தொழிலாளர்கள் யானைகளை விரட்டும் வரை துாக்கமின்றி பரிதவித்தனர்.
