/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றல் மேலாண்மை: தொழில் வளர்ச்சிக்கான சாவி
/
ஆற்றல் மேலாண்மை: தொழில் வளர்ச்சிக்கான சாவி
ADDED : செப் 30, 2025 10:43 PM

தொ ழில் வளர்ச்சியில் முன்னோடி மற்றும் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழகத்தில், துல்லியமாக ஆற்றல் மேலாண்மையைப் பின்பற்றுவதே, நிலையான தொழில் வளர்ச்சிக்கான முக்கிய தேவை என, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆற்றல் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து, தமிழக மின் நுகர்வோர் சங்க (டேக்கா) முன்னாள் தலைவரும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த எரிசக்தி தீர்வுகளை வழங்கும் திங்க்டேட்டா ஏஐ டெக்னாலஜிஸ் நிறுவனருமான பிரதீப்பிடம் பேசினோம்.
அவர் கூறியதிலிருந்து…
தமிழகம் எப்போதும் தொழில்துறையில் முன்னோடி. குறிப்பாக, ஜவுளி, இயந்திர உற்பத்தி, எக்கு மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில்கள் ஆகியவற்றில் தமிழகத்தின் பங்கு, தேசிய அளவிலும், உலக அளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இன்றைய சூழலில் தொழில் துறை வலுவாக இருக்க வேண்டுமெனில், ஆற்றல் (எரிசக்தி) மேலாண்மை மிக முக்கியமான அடிப்படையாகும்.
தமிழகம், சூரிய ஒளியும் காற்றும் வளமாகக் கொண்ட மாநிலம். பல தொழில்கள் ஏற்கெனவே சோலார் மற்றும் காற்றாலை மின் சக்தியை உபயோகித்து செலவுகளை குறைத்து வருகின்றன. இனி வரும் காலங்களில் சோலார், காற்றாலை, மின் சேமிப்புக் கலன் (பேட்டரி) ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முறைகள் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
மின்சாரக் கட்டணங்கள் குறைவாக உள்ள, பீக் ஹவர் அல்லாத சமயங்களில், உற்பத்தியை முன்னிலைப்படுத்துவது அவசியம். ஸ்மார்ட் மீட்டர்கள், ஏ.ஐ., அடிப்படையிலான கண்காணிப்பு, தானியங்கி அமைப்புகள் ஆகியவற்றின் வாயிலாக, தொழிற்சாலைகள் செலவைக் குறைத்து, சேமிப்பை அதிகரிக்கலாம்.
மோட்டார்கள், விளக்குகள், உற்பத்தி இயந்திரங்கள் அனைத்தையும், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்டவைகளாக மேம்படுத்தினால் மொத்த ஆற்றல் செலவில் 15 முதல் 20 சதவீதம் வரை குறைக்க முடியும். இதற்காக, எனர்ஜி ஆடிட் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
தவறான நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (பி.பி.ஏ.,) பல தொழில்களை பாதித்துள்ளது. எனவே, ஒப்பந்தங்களைக் கவனமாக ஆய்வு செய்து, தேவையான இடங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
டேக்கா போன்ற தொழிற் சங்கங்கள் எப்போதும் தொழில்துறையின் குரலாக செயல்பட்டுள்ளன. ஒவ்வொரு தொழில் நிறுவனமும் சங்கங்களில் உறுப்பினராகச் சேர்ந்து புதிய கொள்கைகள், அரசு அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.