சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு விருது வழங்கி கவுரவிப்பு
சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு விருது வழங்கி கவுரவிப்பு
ADDED : ஜூன் 22, 2026 10:04 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு விழா லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. மன்ற தலைவர் சண்முகம், செயலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். போடிபாளையம் பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, பாட்டு, பேச்சு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
எம்.எல்.ஏ., நித்தியானந்தன் தலைமை வகித்து பேசுகையில், ''தனிமனித ஒழுக்கம் இன்மையே சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தனிமனிதன் சுயஒழுக்கத்தோடும், பொறுப்புணர்வோடும் நடந்து கொண்டால், குடும்ப சூழல் மட்டுமின்றி சமூக சூழல், சுற்றுச்சூழல் மேம்படும்,'' என்றார்.
எம்.எல்.ஏ.,வுக்கு 'அன்பு செல்வர்' விருது வழங்கப்பட்டது. ஆலம் விழுது அறக்கட்டளை, பொதுநலம் அறக்கட்டளை, பசுமைக்குரல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு 'பசுமைச்சுடர்' விருதுகள் வழங்கப்பட்டது. கால நிலை மாற்றத்தில் நமது பங்களிப்பு என்ற தலைப்பில், சூழலியல் எழுத்தாளர் லீலா பேசினார். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சாந்தலட்சுமி நன்றி கூறினார்.
