/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!
/
எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!
எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!
எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!
ADDED : பிப் 18, 2024 03:20 AM

பாலக்காடு: எர்ணாகுளம்- - பாலக்காடு மெமு ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிப்பதற்கான தடை நீங்கியுள்ளது.
கேரளாவில், எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை (எண் 66612) மெமு ரயில் இயங்குகிறது. மாலை, 3:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், இரவு, 7:25க்கு பாலக்காடு வந்தடைகிறது.
அதே போல் (எண் 66611) மெமு ரயில், காலை, 8:25 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு, மதியம், 12:30க்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. சேவை முடிந்து, பாலக்காட்டில் நிறுத்தப்படும் இந்த ரயிலை, பொள்ளாச்சி வரை இயக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த, 2015, நவ., 16ல், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட, பாலக்காடு- - பொள்ளாச்சி (54 கி.மீ.,) பாதையில், தற்போது, பாலக்காடு - -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - -திருச்செந்துார் எக்ஸ்பிரஸ், பாலக்காடு - -சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோரிக்கையை பரிசீலனை செய்த, ரயில்வே நிர்வாகம் சாதகமான நிலைபாடு எடுத்துள்ளது. ஆனால், மின் பிரிவுக்கும் மெக்கானிக்கல் பிரிவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி, நாளிதழ்களில் செய்தி வெளியானதை அடுத்து, உயர் அதிகாரிகள் தலையிட்டு தற்போது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.
இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எர்ணாகுளம் - -பாலக்காடு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டுமானால், ரயில் எர்ணாகுளம் சென்றடையும் போது, துாய்மை பணி மற்றும் தண்ணீர் நிரப்பும் பணிகளை செய்ய வேண்டும். இதற்கு, திருவனந்தபுரம் கோட்ட மெக்கானிக்கல் பிரிவு தயாராக இல்லை.
இதுதொடர்பாக, பாலக்காடு கோட்டம் அனுப்பும் கடிதங்களுக்கு, திருவனந்தபுரம் கோட்டம் தக்க பதில் வழங்குவதில்லை. தற்போது, இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.
இதையடுத்து, நேற்று ரயில் துாய்மை பணிகளை செய்கிறோம் என்று, திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
தாமதமின்றி இதற்கான ஒப்பந்தம் செய்ய, மெக்கானிக்கல் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்படும். ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தம் அளிக்கப்படும் என்று திருவனந்தபுரம் கோட்ட நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.