/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலம் மாறினாலும் தெருக்கூத்து மாறலை
/
காலம் மாறினாலும் தெருக்கூத்து மாறலை
ADDED : ஜன 18, 2025 12:12 AM

மேட்டுப்பாளையம்,; சிறுமுகை அருகே பாரம்பரிய இரணியன் தெருக்கூத்து நடந்தது. இதில் பட்டதாரி இளைஞர்கள் முதல், கைத்தறி நெசவு செய்யும் முதியவர்கள் வரை, 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
சிறுமுகை அருகே பகத்துாரில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பரம்பரை பரம்பரையாக இரணியன் தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.
கொட்டும் பனியிலும் சிறுவர் முதல், பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள், இளைஞர், இளம் பெண்கள் ஆகியோர் தரையில் அமர்ந்து, தெருக்கூத்தை ரசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று இரவு, 9:00 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை, 8:00 மணி வரை தெருக்கூத்து நடைபெறும். இதில் இரணியன் வதம் செய்யும் தெருக்கூத்தை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பகத்துார் இரணிய நாடக சபா ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், தண்டபாணி ஆகியோர் கூறியதாவது:
இப்பகுதியில் முன்னொரு காலத்தில், பிளாக் நோயால் பலர் இறந்துள்ளனர். அப்போது இருந்த எங்களுடைய முன்னோர்கள், பெருமாளை வழிபட்டால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று, இரணியன் கதை தெருக்கூத்தை மூன்று நாட்களுக்கு மேல், தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.
கூத்தின் இறுதியில் இரணிய மகாராஜன், தனது மகன் பிரகலாதனை தன்னை வழிபடும்படி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் பிரகலாதன் பெருமாளை வழிபடுவேன் என கூறி வருகிறார். தனது மகனை கடலில் தள்ளியும், எமதர்மனிடம் கொல்லச் சொல்லி முயற்சி செய்வார். முடியாததால் இரணிய மகாராஜன், நீ வழிபடும்கடவுள் எங்கிருக்கிறார் என்று கேட்டபோது, பிரகலாதன் துாணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவார்.
உடனே துாணை காட்டி, இதில் உள்ளாரா என அந்த துணை வெட்டும்போது, அதிலிருந்து பெருமாள் நரசிம்மர் அவதாரம் எடுத்து வெளிவந்து, இரணிய மகாராஜனின் வயிற்றைக் நகத்தால் கிழித்து, அவரை வதம் செய்வார். அதன் பின் நரசிம்மர் பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்வது போன்று, தெருக்கூத்து கதை அமைந்துள்ளது.
இறுதியில் பட்டாபிஷேகத்தின் போது, சிறப்பு பூஜை செய்து முடித்த பின், பூஜையில் வைத்த விபூதியை தெருக்கூத்து பார்க்கும் அனைவருக்கும் வழங்கப்படும்.
விபூதியை நெற்றியில் வைப்பவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவர். இரவு, 9:00 மணிக்கு அமர்ந்து கூத்து முடியும் வரை, எழுந்திருக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பர். இந்த தெருக்கூத்தில் வேஷம் கட்டி நடிப்பவர்கள், ஐடி கம்பெனியிலும், வெளிநாடுகளிலும் வேலை பார்ப்பவர்கள்.
இதற்காகவே லீவு எடுத்து வந்து, தெருக்கூத்தில் நடிப்பர். உள்ளூரில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் விரதம் இருந்து, தெருக்கூத்தில் நடிப்பர்.
எங்கள் முன்னோர்கள் நடத்தி வந்த இரணியன் தெருக்கூத்தை, பாரம்பரிய கலையாக எங்கள் முன்னோர்கள் பாவித்து, 200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்தனர். அவர்கள் வழியில் நாங்கள் கூத்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.