பொள்ளாச்சியில் அரசு சித்த மருத்துவக்கல்லுாரி... எதிர்பார்ப்பு!மூலிகை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை
பொள்ளாச்சியில் அரசு சித்த மருத்துவக்கல்லுாரி... எதிர்பார்ப்பு!மூலிகை வளத்தை பாதுகாக்க நடவடிக்கை தேவை
UPDATED : ஜூன் 23, 2026 05:02 PM
ADDED : ஜூன் 23, 2026 05:00 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மூலிகை பண்ணையுடன் கூடிய சித்த மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, உலகின் அரிய உயிர் சூழல் மண்டலங்களுள் ஒன்றான ஆனைமலை புலிகள் காப்பகம். வனப்பகுதியில் பல்வேறு வனஉயிரினங்கள் வாழும் சூழ்நிலை உள்ளதுடன், பல்வேறு வகையான தாவர இனக்காடுகள், தட்பவெப்பநிலை, உயரம் கொண்டதாக இவ்வனப்பகுதி உள்ளது.
மலைப்பகுதியில், குன்றிமணி, வசம்பு, ஆடாதோடை, சோற்றுக்கற்றாழை, சிற்றரத்தை, அசோகு, பரங்கிப்பட்டை, மருது, கண்வலிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகை செடிகளும் நிறைந்துள்ளன. இவற்றை பாதுகாக்க மூலிகை பண்ணையுடன் அரசு சித்த மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து, முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இயற்கையாகவே ரோட்டோரங்கள் மற்றும் பல இடங்களில், மூலிகை செடிகள் வளர்ந்துள்ளன. இவற்றின் பயன் அறியாமல் பலரும் உள்ளனர். இந்த செடிகள், அதிகளவு வெட்டப்பட்டு கேரளா மாநிலத்துக்கு கடத்தப்படுகின்றன. இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதுபோன்ற பிரச்னைகளை களையும் வகையில், மூலிகை பண்ணையுடன் சித்த மருத்துவ கல்லுாரி துவங்கினால் பயனாக இருக்கும்.
மூலிகைளை பாதுகாக்கவும், அவற்றை அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், அவற்றின் பயன்கள், சித்த மருத்துவத்தை பாதுகாக்க சித்த மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும். இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இது குறித்து அரசின் கவனத்துக்கு மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும்.
தென்னை மரங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படும் சூழலில், இந்த மூலிகை செடிகளும் சாகுபடி செய்தால் பயன் கிடைக்கும். இதனால், மக்களிடம் மூலிகை வளர்ப்பு ஊக்கம் பெறும். நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமும் காக்கப்படும்.
எனவே, பொள்ளாச்சியில் மூலிகை பண்ணையுடன் கூடிய சித்த மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும். இது குறித்து புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, கூறினர்.
