/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு இல்லாத படகு சவாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
/
பராமரிப்பு இல்லாத படகு சவாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
பராமரிப்பு இல்லாத படகு சவாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
பராமரிப்பு இல்லாத படகு சவாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
ADDED : ஜன 16, 2025 11:50 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆழியாறு அணை அருகே படகுசவாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. இதை புனரமைத்து படகுசவாரி இங்கு துவங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணியர், ஆழியாறு பூங்கா, அணையை சுற்றிப்பார்த்து, கவியருவிக்கு செல்வது வழக்கம்.
அணையின் அழகை ரசிக்கும் வகையில் கடந்த, 1991ம் ஆண்டு முதல் கோட்டூர் பேரூராட்சி சார்பில், படகு சவாரி இயக்கப்பட்டது. இதற்காக பெரியவர்களுக்கு, 40 ரூபாய் மற்றும் சிறுவர்களுக்கு, 30 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. அணைக்கு வரும் சுற்றுலாப்பயணியரும் படகுசவாரி செய்யாமல் செல்வதில்லை. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களினால் படகுசவாரி ரத்து செய்யப்பட்டது.
கடந்த, 2023ம் ஆண்டு மார்ச் மாதம் படகுசவாரி இயக்கப்பட்டது. காலை, 9:00 முதல் மாலை, 5:30 மணி வரையும், பெரியவர்களுக்கு, 150 ரூபாய், சிறுவர்கள், மூன்று வயது முதல், 10 வயதுக்குள், 100 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
மோட்டார் படகு, 15 பேர் முதல், 18 பேர் வரை, 15 நிமிடத்துக்கு, 2,700 ரூபாயும், குறைந்த கட்டணம், 1 முதல், 10 பேர் வரை, 1,500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. சில வாரங்கள் இயக்கப்பட்ட படகுசவாரி மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணியர் ஏமாற்றத்துடன் செல்லும் சூழல் உள்ளது.
பராமரிப்பு இல்லை
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையையொட்டி படகு சவாரிக்காக இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு, படகு நிறுத்த இடம் மற்றும் பூங்கா கட்டமைப்புகள் போன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதுடன், படகுசவாரி துவங்கப்படவில்லை. அந்த இடமும் போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு நீர்வளத்துறை சார்பில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. கம்பிவேலியும் சேதப்படுத்தியுள்ளனர். எனவே, இந்த இடத்தை சுத்தம் செய்து, போதிய பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, படகுசவாரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.