/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல் கொள்முதல் விலையை உயர்த்த எதிர்பார்ப்பு!: குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்குமா?
/
நெல் கொள்முதல் விலையை உயர்த்த எதிர்பார்ப்பு!: குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்குமா?
நெல் கொள்முதல் விலையை உயர்த்த எதிர்பார்ப்பு!: குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்குமா?
நெல் கொள்முதல் விலையை உயர்த்த எதிர்பார்ப்பு!: குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்குமா?
ADDED : மார் 07, 2026 06:06 AM

பொள்ளாச்சி: ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நெல் சாகுபடி அதிகமுள்ள நிலையில், நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு, 2,450 ரூபாய் வழங்கும் நிலையில், மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், என அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தி வரு கின்றனர்.
ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதியில், நெல், தென்னை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதிய லாபம் இருந்ததால், மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை முதல் போகமும், செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இரண்டாம் போகமும் நெல் சாகுபடி நடைபெற்றது.
நெல் சாகுபடியில், நாற்றங்கால் முதல் அறுவடை வரை பல்வேறு நிலைகளில், தேவைப்படும் ஆட்கள் போதுமான அளவு கிடைக்காததால், மிகுந்த சிரமங்களுக்கு இடையே நெல் சாகுபடியை மேற்கொள்கின்றனர். இப்பகுதியில், ஆட்களை கொண்டும், இயந்திரங்கள் வாயிலாக நடவு செய்யும் நெல் சாகுபடி செய்யும் பணி நடக்கிறது.
அறுவடை நேரத்தில் தமிழக அரசின் நெல் கொள்முதல் மையங்கள் துவங்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகின்றன. 17 சதவீதம் ஈரப்பதத்துடன் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால், இருபருவத்திலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. நவ. - டிச. மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைக்கு தயாராகி வருகிறது. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் துவங்கப்பட உள்ளது.
இதையடுத்து, கோட்டூரில் விரைவில் நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன் கூறியதாவது:
நெல் சாகுபடிக்கான செலவு அதிகரித்துள்ளது. உரம் உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்துள்ளது. ஆனால், நெல்லுக்கான விலை மட்டும் உயரவில்லை.
ஆண்டுதோறும் நெல் கொள்முதல் மையம் துவங்குவதற்கு முன் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுப்பது தொடர்கதையாகியுள்ளது. தற்போது, நெல் குவிண்டாலுக்கு, பொது ரகம் 2,450 மற்றும் சன்னரகம் 2,500 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
விலை உயராமல் ஒரே விலையில் நீடிப்பதால் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். நெல் சாகுபடிக்கு அதிக செலவு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால், சாகுபடி பரப்பளவு ஏற்கனவே குறைந்துள்ளன. அரசு உரிய கவனம் செலுத்தாவிட்டால் நெல் சாகுபடி பரப்பு சுருங்கி விடும்.
சாகுபடி முதல், அறுவடை வரை செலவு அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப நெல் விலையை உயர்த்தி கொடுத்தால் மட்டுமே பயன் பெற முடியும். குவிண்டாலுக்கு, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினார்.

