/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் உதவி இயக்குனர் இல்லாததால் விவசாயிகள் வேதனை! அரசின் திட்டங்கள் சென்றடைவது பாதிப்பு
/
வேளாண் உதவி இயக்குனர் இல்லாததால் விவசாயிகள் வேதனை! அரசின் திட்டங்கள் சென்றடைவது பாதிப்பு
வேளாண் உதவி இயக்குனர் இல்லாததால் விவசாயிகள் வேதனை! அரசின் திட்டங்கள் சென்றடைவது பாதிப்பு
வேளாண் உதவி இயக்குனர் இல்லாததால் விவசாயிகள் வேதனை! அரசின் திட்டங்கள் சென்றடைவது பாதிப்பு
ADDED : மே 05, 2025 10:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் ஒன்றரை ஆண்டுகளாகியும் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், வேளாண் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 39 ஊராட்சிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை, வாழை, வெங்காயம், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் சந்தேகங்களை கேட்டறியவும், மானிய திட்டங்களில் பலன்பெறவும், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மீன்கரை ரோட்டில் அமைந்துள்ளது.
வேளாண் உதவி இயக்குனர் தலைமை அலுவலராகவும், இவரின் கீழ், வட்டார அளவில் வேளாண் அலுவலர், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் செயல்படுவர். இவர்களது பணிகளை கண்காணிப்பு செய்தல், அரசின் வேளாண் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வேளாண் உதவி இயக்குனர் மேற்கொள்வார்.
பயிர் சாகுபடி, பூச்சி, உர மேலாண்மை, பாசனம் செய்வது குறித்து வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள் வேளாண் உதவி இயக்குனரால் வழங்கப்படும்.வேளாண் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல், விவசாயிகளுக்கு மானியங்கள், உதவித்தொகை போன்ற திட்டங்களை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விதைகள், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை தரத்துடன் விற்பனை செய்வதை உறுதி செய்தல், ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும், கிராமங்களில் வேளாண் உதவி இயக்குனர், வேளாண் வளர்ச்சி குழு கூட்டங்களை நடத்தி விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது அவரது முக்கிய பணியாக உள்ளது. இது தவிர நீர் மேலாண்மை ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கவனிக்க வேண்டும்.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில், இவ்வளவு முக்கிய பொறுப்புள்ள உதவி இயக்குனர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், இங்கு பணியாற்றிய உதவி இயக்குனர், பதவி உயர்வு பெற்று கோவைக்கு சென்றார். அதன்பின், பணியிடம் காலியாகவே உள்ளது.
சில காலம், தெற்கு வேளாண் உதவி இயக்குனரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அதன் பின், கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனரிடம் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனரும், பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில் மீண்டும் அந்த பணியிடத்துக்கு ஆள் இல்லாத சூழல் உள்ளது. கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டாலும், அதிகாரிகள் இரண்டு வட்டாரங்களையும் கவனிப்பதில் நிறைய நடைமுறை சிக்கல் உள்ளன.
பொள்ளாச்சி தாலுகாவில் வடக்கு வட்டாரம், பரப்பளவில் பெரியது. 39 ஊராட்சிகளும், நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இந்நிலையில், வேளாண் உதவி இயக்குனர் நிரப்ப தயக்கம் காட்டுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் விவசாய மேம்பாட்டுக்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், மானியம் முதல் அனைத்து பணிகளும் வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் இல்லாததால் தாமதமாக நடக்கிறது.
இங்குள்ள வேளாண் உதவி அலுவலர்களை கொண்டே பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், பயிர்களில் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதும் பாதிக்கிறது.
சந்தேகங்களை கேட்டறியவும், மானிய திட்டப்பலனை முழுமையாக பெற முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசு, இதற்குரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.