/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளி கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளிப்பு! மண் கொண்டு செல்ல தடை காரணமாக சிக்கல்
/
திறந்தவெளி கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளிப்பு! மண் கொண்டு செல்ல தடை காரணமாக சிக்கல்
திறந்தவெளி கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளிப்பு! மண் கொண்டு செல்ல தடை காரணமாக சிக்கல்
திறந்தவெளி கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளிப்பு! மண் கொண்டு செல்ல தடை காரணமாக சிக்கல்
ADDED : பிப் 18, 2025 10:20 PM

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் வட்டாரத்தில் பயன்படுத்தாத கிணறுளை மூடுவதற்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
சின்னதடாகம் வட்டாரத்தில், 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டன.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, பன்னிமடை, சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இயங்கி வந்த, 180 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது.
மேலும், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மண்ணை வாகனங்களில் கொண்டு செல்வதோ அல்லது பிற வகைகளில் கொண்டு செல்வதோ கூடாது என, தடை விதிக்கப்பட்டது.
இத்தடையை கோவை மாவட்ட நிர்வாகமும், அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சின்னதடாகம் வட்டாரத்தில் உள்ள, 25க்கும் மேற்பட்ட பயன்பாடு இல்லாத கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர்.
இது குறித்து, நஞ்சுண்டாபுரம் விவசாயி பிரபு கூறுகையில், சின்னதடாகம் வட்டாரத்தில், 25க்கும் மேற்பட்ட சுமார், 150 அடி ஆழமுள்ள கிணறுகள் திறந்த வெளி கிணறுகளாக உள்ளன. பயன்பாட்டில் இல்லாத இக்கிணறுகளை பராமரிப்பது பெரும் சிரமமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான இங்கு இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். குறிப்பாக காட்டுப்பன்றி, யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பட்டியலில் உள்ள இந்த விலங்குகள் கிணற்றில் தவறி விழுந்தால், விவசாயிகள் வனத்துறையினரின் வழக்குகளுக்கு ஆளாக வேண்டி உள்ளது. மேலும், திறந்தவெளி கிணறுகளில் மோட்டார் ரிப்பேர் உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால், அதை சரி செய்ய ஆட்களை பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இது போன்ற சிரமங்களை தவிர்க்க பெரும்பாலானவர்கள் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சின்னதடாகம் வட்டாரத்தில் மண்ணை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வாகனங்களில் கொண்டு செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருப்பதால், பயன்பாடு இல்லாத கிணறுகளை மூட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஆனால், மாசற்ற கட்டடக் கழிவுகளை கொண்டு நிரப்பலாம்.
இது தொடர்பாக சின்னதடாகம் வட்டார விவசாயிகள் மாசற்ற கட்டடக் கழிவுகளை கிணறுகளில் நிரப்ப விருப்பப்பட்டால், 94873 62024 என்ற எண்ணை தொடர்பு கொண்டால், மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு அரசும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.