/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள்... முற்றுகை!; 'தட்கல்' திட்ட இலக்கு எட்டியதால் சிக்கல்
/
மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள்... முற்றுகை!; 'தட்கல்' திட்ட இலக்கு எட்டியதால் சிக்கல்
மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள்... முற்றுகை!; 'தட்கல்' திட்ட இலக்கு எட்டியதால் சிக்கல்
மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள்... முற்றுகை!; 'தட்கல்' திட்ட இலக்கு எட்டியதால் சிக்கல்
ADDED : டிச 20, 2025 08:51 AM

பொள்ளாச்சி: 'தட்கல்' திட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி, பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக பதிவு செய்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், ஆண்டுதோறும் விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
நடப்பாண்டு உடனடி மின் இணைப்பு வழங்கும், 'தட்கல்' திட்டத்தில் தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க அரசு அனுமதி அளித்தது.
இத்திட்டத்தில், 5 ெஹச்.பி. மின் இணைப்புக்கு, 2.5 லட்சம் ரூபாய், 7.5 ெஹச்.பி. மின் இணைப்புக்கு, 2.75 லட்சம் ரூபாய், 10 ெஹச்.பி.க்கு, 3 லட்சம், 15 ெஹச்.பி.க்கு, 4.5 லட்சம் ரூபாய் 'டிடி'யாக எடுத்து செலுத்தினால், உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு ஆவணங்களாக, கிராம நிர்வாக அலுவலர் உரிமைச்சான்று, கணினி சிட்டா, அடங்கல், வரைபடம், கூட்டு வரைபடம், பத்திர நகல், கூட்டு சிட்டா, உறுதிமொழி படிவம் ஆகியவை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆவணங்கள் தயார் செய்து வந்த விவசாயிகளிடம், மின் இணைப்புக்கான இலக்கு முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மின்வாரிய அலுவலகத்தை, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, கால அவகாசம் நீட்டிக்க வேண்டும், விண்ணப்பித்த அனைவரிடமும் விண்ணப்பங்களை பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
விவசாயிகள் கூறியதாவது: 'தட்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க, கடந்த, 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்து விண்ணப்பிக்க வந்தால் ஆவணங்கள் புதுப்பித்து வழங்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆவணங்கள் தயார் செய்து, வங்கிக்கு சென்று, 'டிடி' எடுக்கப்பட்டது. அதன்பின், அலுவலகம் வந்தால், கூட்டமாக இருந்ததால் 'டோக்கன்' வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் கூட்டம் அதிகமாக வந்ததால், 70க்கும் மேற்பட்டோரை அலுவலகத்துக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. மதியம், 2:00 மணிக்கு மேல் 10,000 இலக்கு முடிந்தது என்ற தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனடி பண தேவைக்காக கால்நடைகளை விற்றும், நகைகளை விற்றும் 'டிடி' எடுத்து வந்தோம். ஆனால், பொள்ளாச்சியில் மட்டும் அனைத்து ஆவணங்களும் புதுப்பித்து பெற்றுத்தர கூறியதால் காலவிரயம் ஏற்பட்டதுடன், உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே, 'டிடி' எடுத்து வந்த நிலையில் திருப்பி அனுப்புவது ஏமாற்றம் அளிக்கிறது. இது குறித்து, அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'அரசு இலக்கு நிர்ணயித்தப்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும், 12,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பொள்ளாச்சி பகுதியில் விண்ணப்பிப்பவர்களிடம், உரிய ஆவணங்கள் புதுப்பித்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
விண்ணப்பங்கள் தள்ளுபடி ஆகக்கூடாது என்பதற்காக ஆவணங்கள் முறையாக வழங்க அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள், உயர் அதிகாரிகள், பொள்ளாச்சி எம்.பி.யிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

