/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 14, 2024 08:50 PM

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு வட்டாரத்தை பொறுத்தவரை, பயிர் வகைகளை தொடர்ந்து, தக்காளி சாகுபடி அதிக அளவில் உள்ளது. இதில், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர்.
தக்காளி சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: விவசாயத்தில், பயிர்களை சுழற்சி முறையில் பயிரிட்டு வருகிறோம். இதில், அதிகளவு தக்காளி பயிரிடப்படுகிறது. விளை நிலத்தில், 1.5 ஏக்கர் அளவுக்கு, 'சாகோ' வகை தக்காளி பயிரிட்டு, இரண்டரை மாதங்கள் ஆகிறது. தற்போது வரை பராமரிப்பு, இயற்கை மற்றும் ரசாயன உரம், பறிப்பு கூலி என, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.
மேலும், நாள் ஒன்றுக்கு, 100 பெட்டிகள் வரை பறிப்பு உள்ளது. காலநிலை மற்றும் மழை முறையாக இருந்தால் கூடுதலாக சாகுபடி செய்ய முடியும். தக்காளி நடவு செய்யும் போது பெட்டி (15 - கிலோ) 700 ரூபாய்க்கு விற்றது. தற்போது பறிப்பு காலத்தில், 250 ரூபாய்க்கு ஒரு பெட்டி விற்பனை ஆகிறது. ஒரு பெட்டி தக்காளி, 500 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் லாபம் ஈட்ட முடியும். அதற்கும் குறைவாக விற்பனையானால், நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினர்.