/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : மே 10, 2025 02:18 AM

உடுமலை : தோட்டக்கலைத்துறை சார்ந்த மானிய திட்டங்களில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு, மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், பூசணி, தர்பூசணி, பப்பாளி, மா மற்றும் தென்னை என தோட்டக்கலை பயிர்கள், அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில், நடப்பு ஆண்டு, தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக, தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க வீரிய ஒட்டு ரகங்களை ஊக்குவித்தல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி செய்தல், அடர் நடவு சாகுபடி முறைகள், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், தரமான நடவு பொருட்களை வழங்குதல், தேனீ வளர்ப்பு வாயிலாக மகரந்த சேர்க்கை ஊக்குவித்தல், அறுவடைக்குப்பின் மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், குறிப்பிட்ட பயிருக்கான திட்டங்கள் மற்றும் பொருத்தமான உயர் தொழில்நுட்பங்களில் சிறப்பு கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
சாகுபடி பரப்பை அதிகரித்தல்
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தேவையான பழ நாற்றுகள், காய்கறி நாற்றுகள், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து, மானிய விலையில் நாற்றுகள் வழங்கப்படுகிறது.
அதோடு, அங்கக இடுபொருட்களும் மானியத்தில் வழங்கப்படுகிறது. தக்காளி மூன்று ஹெக்டேருக்கும், மிளகாய், ஒரு ஹெக்டேருக்கும், தேவையான குழித்தட்டு நாற்றுகள் மற்றும் அங்கக உரங்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்காக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படுகிறது. பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மல்லிகை பயிரிட ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
பழப்பயிர்களான கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள கொய்யா நாற்றுகள் மற்றும் அங்கக இடுபொருட்களும், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேருக்கு ரூ. 26 ஆயிரத்து 400- மதிப்புள்ள வாழைக்கன்றுகள், அங்கக இடு பொருட்களும் வழங்கப்படும்.
மா, கொய்யா தோட்டங்களை புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், பழைய மா தோட்டம் மற்றும் கொய்யா தோட்டங்களை புதுப்பிக்க, ஒரு ஹெக்டேருக்கு, ரூ. 4 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
போர்வெல் நீர், மழை நீரை சேமித்து வைக்கவும், தனிநபர்களுக்கான நீர் சேகரிப்பு அமைப்பான பண்ணை குட்டை அமைக்க, ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
பறவை வலை அமைத்தல்
தோட்டக்கலை பயிர்களை பறவைகளிலிருந்து பாதுகாப்பதற்காக பறவை வலை, 1,500 சதுர மீட்டருக்கு மானியம் வழங்கப்படும். குறிப்பாக கொய்யா, மாதுளை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கும், பந்தல் காய்கறி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு, இந்தப்பறவை வலை அமைப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மைத்திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,500 -மதிப்புள்ள உரங்கள் மற்றும் அங்கக பூஞ்சான கொல்லிகள் வழங்கப்படுகிறது.
மண்புழு உற்பத்தி கூடாரம்
இயற்கை முறையில் மண்புழு உரம் உற்பத்தி செய்து, விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நிரந்தர மண்புழு உற்பத்தி கூடாரம் அமைப்பதற்கு, ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
தேனீக்கள் வளர்ப்பதால், தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து, மகசூல் அதிகரிப்பதுடன், தேனை சேகரிப்பதன் வாயிலாக, விவசாயிகளுக்கு கூடுதலாக வருமானமும் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காக, ஒரு யூனிட்டுக்கு ரூ.24 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதில், தேனீக்களுடன் 50 தேனீ பெட்டிகள், 5 தேன் பிழியும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது.
அறுவடை பின்செய் மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க, ரூ. ஒரு லட்சத்து, 25 ஆயிரம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், விவசாய பொருட்கள் நேரடியாக மக்களைச் சென்று சேர்வதற்காக, நகரும் காய்கறி விற்பனை வண்டி ரூ. 15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
பண்ணைக்குத் தேவையான விவசாய கருவிகளான, கடப்பாரை, மண்வெட்டி, தார்பாலின் போன்ற உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கிக் கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-- 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன், 96598 38787; பூவிகா தேவி, 80720 09226 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.