காய்கறி தொகுப்பு ‘கிட்’ பெற விவசாயிகளுக்கு அழைப்பு
காய்கறி தொகுப்பு ‘கிட்’ பெற விவசாயிகளுக்கு அழைப்பு
UPDATED : நவ 13, 2026 05:53 PM
ADDED : நவ 13, 2026 05:46 PM
பொள்ளாச்சி: ஆனைமலை வட்டார விவசாயிகள், ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்’ திட்டம் வாயிலாக, மாடித்தோட்டம் ‘கிட்’ பெற, தோட்டக்கலை துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்று வாட்டார பகுதிகளில், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் காய்கறி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.
வீட்டுத்தோட்டங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உரங்கள் பயன்படுத்தி நச்சுத்தன்மையற்ற பழங்களும், காய்கறிகளும் உற்பத்தி செய்யும் வகையில், அரசு சார்பில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்’ அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக, செடி வளர்ப்புக்கான தொகுப்புகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதில், மாடித்தோட்டம் கிட், 50 சதவீதம் மானியத்தில் பெறலாம். 100 கிட் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காய்கறி விதைகள் தொகுப்பு, 75 சதவீதம் மானியத்தில் பெறலாம். இதற்கு, 680 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, பழச்செடிகள் தொகுப்பு, 75 சதவீத மானியத்தில் பெறலாம். இதற்கு, 610 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு, ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இதைப்பெற, ஆதார் கார்டு, போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். முன் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற, தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, ஆனைமலை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனா தேவி தெரிவித்தார்.
