/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
/
விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
ADDED : பிப் 11, 2025 11:53 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம் நடக்கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.
விவசாயிகள் நில உடமை பதிவுகளை சரிபார்க்க, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்துறை அறிவித்துள்ளது. அனைத்து வருவாய் கிராமங்களிலும் பொது இடமான கிராம பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் இம்முகாம் நடக்கிறது.
இம்முகாமுக்கு வரும் விவசாயிகள் ஆதார் அட்டை, நில பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் ஆகியவை உடன் வந்து பதிவு செய்து, விவசாயி என்பதற்கான அடையாள எண் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இனிவரும் காலங்களில் இந்த விவசாய அடையாள எண் முக்கியத்துவம் பெறுகிறது. வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளின், அரசு உதவிகள் பெற, இந்த அடையாள எண் அவசியமாக்கப்பட உள்ளது.
இது குறித்து வேளாண்துறையினர் கூறுகையில், 'இந்தத் திட்டத்தால் நில விபரங்களை இணைப்பதன் வாயிலாக, அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். ஒவ்வொரு முறையும், விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.
விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்தால், முன்னுரிமை அடிப்படையில் அரசின் நல திட்டங்களை எளிதில் பெறலாம். பிரதமரின் கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு உள்ளிட்ட இதர மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் தற்போது, 54 ஆயிரத்து, 500 விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் பதிவு செய்து, பயனடைந்து வருகிறார்கள்.
இத்திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள் வருகை தந்து தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்வர். இதை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் துறையினரை விவசாயிகள் அணுகலாம்' என்றனர்.