/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்குவாரி நீரை ஆற்றில் வெளியேற்ற ஆட்சேபனை விவசாயிகள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி
/
கல்குவாரி நீரை ஆற்றில் வெளியேற்ற ஆட்சேபனை விவசாயிகள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி
கல்குவாரி நீரை ஆற்றில் வெளியேற்ற ஆட்சேபனை விவசாயிகள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி
கல்குவாரி நீரை ஆற்றில் வெளியேற்ற ஆட்சேபனை விவசாயிகள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : நவ 19, 2025 03:41 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுறம்பு தனியார் கல் குவாரியில் இருக்கும் நீரை வெளியேற்றுவது குறித்து, அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் பாறையை உடைக்கும் போது அருகில் இருந்த வீடு மற்றும் விளை நிலங்களில் கற்கள் விழுந்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக குவாரி செயல்படவில்லை.
இந்நிலையில் குவாரி உரிமையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குவாரி செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும், குவாரியில் தேங்கிய தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குவாரியில் தேங்கிய தண்ணீரை, சொக்கனூரில் இருந்து முத்துக்கவுண்டனூர் வழியாக கேரளா செல்லும் ஆற்றில், வெளியேற்றும் பணி நடந்தது. இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் சிலர் குவாரியை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், தாசில்தார் குமரிஆனந்தன் தலைமையில், கிணத்துக்கடவு போலீசார், வருவாய்த் துறையினர், கனிமவளத் துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், விவசாயிகள் என பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் தரப்பில் பேசுகையில், குவாரியில் வெடிவைத்து கற்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் வெடி மருந்து, வண்டல் மண் மற்றும் இதர கழிவுகள் கலந்திருக்க அதிக வா ய்ப்பு உள்ளது. இதை அருகில் உள்ள ஆற்றில் வெளியேற்றினால், அருகில் உள்ள விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கும். எனவே, அரசு விதிப்படி குவாரியில் உள்ள தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என, தெரிவித்தனர்.
அதிகாரிகள் தரப்பில் பேசுகையில், 'அரசு விதிகளுக்கு உட்பட்டு குவாரியை இயக்க கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, விதிமுறைகளை மீறி கல்குவாரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டுள்ளது. விதிமுறையை பின்பற்றாமல் தண்ணீரை வெளியேற்ற நினைத்தால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.
இதில், அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், சுமுக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.

