/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளி சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்; பயிர் மேலாண்மை குறித்து அறிவுரை
/
தக்காளி சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்; பயிர் மேலாண்மை குறித்து அறிவுரை
தக்காளி சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்; பயிர் மேலாண்மை குறித்து அறிவுரை
தக்காளி சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்; பயிர் மேலாண்மை குறித்து அறிவுரை
ADDED : ஜூலை 13, 2025 08:38 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில், தக்காளி சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளதால், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள் குறித்து தோட்டக்கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும் 450 ஹெக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. சாகோ, சிவம் உள்ளிட்ட தக்காளி ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
தற்போது, தக்காளி நடவு ஆங்காங்கே துவங்கியுள்ளதால், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மேலாண்மை குறித்து கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தக்காளி நடவுக்கு முன் நிலத்தை ஆழமாக உழவு செய்து, 15 முதல் 30 நாட்கள் வெயில் படும்படி தரிசாக வைத்திருக்க வேண்டும். இதனால், நூற்புழுக்கள் மண்ணின் மேல் பகுதிக்கு வந்து சூரிய வெப்பம் பட்டு அழிந்து விடும். இத்துடன் கூட்டுப் புழுக்களும் அழிகிறது.
இதை தொடர்ந்து, 6 வார இடைவெளியில் நாற்று நடவு செய்ய வேண்டும். பசுமை குடில் சாகுபடியில் பூச்சிகள் உட்புகா வண்ணம், வலை அமைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
கடைசி உழவின் போதும், பூக்கும் பருவத்திலும், ஒரு ஏக்கருக்கு 100 கிலோ அளவில் வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். இதனால் காய்ப்புழு, இலை துளைப்பான் மற்றும் நூற்புழு தாக்குதலை தவிர்க்கலாம்.
தக்காளி நடவு செய்த ஒரு வாரத்துக்குப் பின், மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறியுடன், ஊசிக்காய் துளைப்பானை கவர்ந்திழுக்கக்கூடிய இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு, 40 எண்ணிக்கையில் வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
மேலும், விளக்கு பொறி (ஏக்கருக்கு ஒன்று) வைத்து தாய் பூச்சிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பச்சை காய் புழுவின் நடமாட்டத்தை கண்காணிக்க, 30ம் நாளில் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து செடிகளை பாதுகாப்பது அவசியம்.
செடிகளில் காய் பிடிக்கும் பருவத்தில், நான்கு அல்லது ஐந்து முறையாவது பாதிக்கப்பட்ட காய்கள் மற்றும் பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும். நோய் தாக்குதல் அடைந்த தக்காளி செடிகளை ஒன்றாக சேகரித்து முற்றிலும் அழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தக்காளி பயிரில் மகசூல் அதிகரிப்பதோடு, பயிர் நன்கு வளர்ச்சி அடையும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.