/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடுகளை கொல்லும் காட்டுப் பன்றிகள்; விவசாயிகள் கவலை
/
ஆடுகளை கொல்லும் காட்டுப் பன்றிகள்; விவசாயிகள் கவலை
ஆடுகளை கொல்லும் காட்டுப் பன்றிகள்; விவசாயிகள் கவலை
ஆடுகளை கொல்லும் காட்டுப் பன்றிகள்; விவசாயிகள் கவலை
ADDED : அக் 02, 2025 06:43 AM
மேட்டுப்பாளையம்; சிறுமுகையை அடுத்த லிங்காபுரம், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, வச்சினம்பாளையம், மூலையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகள் வளர்ப்பால் இவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காட்டுப்பன்றிகள், கிராமங்களில் உள்ள வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை தாக்கி வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது:
இப்பகுதியில் காட்டு பன்றிகளால் ஆடுகள் வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சிறுமுகை வச்சினம்பாளையத்தில் காட்டுப்பன்றிகள் ஆடுகளை தாக்கி, அதன் குடலை சாப்பிட்டுள்ளன. இதை வீட்டின் உரிமையாளர்கள் பார்த்து விரட்டியுள்ளனர். இதில் அப்பகுதியில் மூன்று ஆடுகள் இறந்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு சிறுமுகை லிங்காபுரம் மனோகரன் என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை, காட்டுப்பன்றி தாக்கி உள்ளது. சத்தம் கேட்டு மனோகரன் வெளியே வந்து காட்டுப் பன்றியை விரட்டியுள்ளார். காயமடைந்த ஆட்டுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் பலன் அளிக்காமல் ஆடு இறந்துள்ளது. பிரேத பரிசோதனை செய்ததில் காட்டுப்பன்றி தாக்கியதில், ஆட்டின் குடல் சேதமடைந்திருந்தது தெரிய வந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள விவசாயக் கூலி தொழிலாளர்கள், ஆடுகளை திறந்தவெளியில் மேய விடுவது வழக்கம். தற்போது காட்டுப்பன்றிகள் ஆடுகளை தாக்கி குடல் பகுதியை சாப்பிடும் ப ழக்கம் புதிதாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இப்பகுதியில் ஆடுகள் வளர்க்க முடியாத நிலை ஏற்படும்.
இதனால் விவசாயக் கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே காட்டுப் பன்றிகளின் பிரச்னைக்கு, வனத்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.