/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிர் பயம் காட்டுது 'பை பாஸ்' ரோடு! கடந்த ஓராண்டில் 120 பேர் பலி சாலை விரிவாக்கம் மிக அவசரம்
/
உயிர் பயம் காட்டுது 'பை பாஸ்' ரோடு! கடந்த ஓராண்டில் 120 பேர் பலி சாலை விரிவாக்கம் மிக அவசரம்
உயிர் பயம் காட்டுது 'பை பாஸ்' ரோடு! கடந்த ஓராண்டில் 120 பேர் பலி சாலை விரிவாக்கம் மிக அவசரம்
உயிர் பயம் காட்டுது 'பை பாஸ்' ரோடு! கடந்த ஓராண்டில் 120 பேர் பலி சாலை விரிவாக்கம் மிக அவசரம்
ADDED : பிப் 14, 2024 11:06 PM

-நமது சிறப்பு நிருபர்-
கோவை நகரின் ஒரே புறவழிச்சாலையான 'எல் அண்ட் டி' பை பாஸ் ரோட்டை அகலப்படுத்தாத காரணத்தால், கடந்த ஆண்டில் மட்டும் அங்கு நடந்த விபத்துக்களில், 120 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும், 328 கி.மீ., துாரமுள்ள சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,544), தமிழகத்தில் மட்டும் 198 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது.
இதில், சேலம்-கோவை நீலம்பூர் வரை ஆறு வழிச்சாலையாகவும், கோவை, மதுக்கரை-கேரளா மாநில எல்லை வாளையாறு வரை, நான்கு வழிச்சாலையாகவும் உள்ளது.
இதற்கு இடையில், கோவை நகருக்கான ஒரே புறவழிச்சாலையாகவுள்ள 27 கி.மீ., துாரமுள்ள, 'எல் அண்ட் டி' பை பாஸ் ரோடு மட்டும், இரு வழிச்சாலையாகவுள்ளது.
1997 அக்.,3ல் ஒப்பந்தம் போடப்பட்டு, 1999 டிச.,3ல் திறக்கப்பட்ட இந்த ரோட்டில், 2029 டிச.,3 வரை, சுங்கம் வசூலிக்கும் உரிமம், 'எல் அண்ட் டி' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அதிகரிப்பு
கடந்த 25 ஆண்டுகளில், இந்த ரோட்டில் வாகனங்களின் போக்குவரத்து, பல மடங்கு அதிகரித்துள்ளது.ஆறு வழிச்சாலைக்கும், நான்கு வழிச்சாலைக்கும் இடையில், இந்த 27 கி.மீ., மட்டும் இரு வழிச்சாலையாக, மிகவும் குறுகலாக இருப்பதால், ஆண்டுக்கு ஆண்டு விபத்துக்களின் எண்ணிக்கை,அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில், அதிக விபத்து உயிரிழப்புகள் நடக்கும் மாவட்டமாக கோவை முதலிடம் பெற்றுள்ளது. கோவை ரூரல் போலீஸ் பகுதியில் தான் மூன்றில் இரு பங்கு விபத்து, பலி நடக்கும் நிலையில், அதிலும் இந்த பை பாஸ் ரோட்டில் நடக்கும் உயிரிழப்பே அதிகமாகவுள்ளது.
'பகீர்' புள்ளி விபரம்!
2022ல் நடந்த 680 விபத்துகளில் 711 பேர் பலியாகியிருந்தனர்; அதில், 'எல் அண்ட் டி' பை பாஸ் ரோட்டில் மட்டும் பலியானது 55 பேர். 2023ல், இதே ரூரல் பகுதிகளில் நடந்த 712 விபத்துகளில் 787 பேர் பலியானதில், கோவை பை பாஸ் ரோட்டில் உயிரிழந்தோர் மட்டும் 120 பேர். உயிர் பலி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், இந்த ரோட்டை விரிவாக்கம் செய்யும் விஷயத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மெத்தனமாக உள்ளது.
இன்றைய நிலையில், இந்த ரோட்டை ஆறு வழிச்சாலையாக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த ரோட்டில், 2029 வரை சுங்கம் வசூலிக்கும் உரிமை இருப்பதால், அதுவரை இதை விரிவாக்கம் செய்வதில், தடங்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், 2029 டிச.,3 வரை இந்த ரோட்டை விரிவாக்கம் செய்யாமல் இருந்தால், இன்னும் ஆயிரம் பேராவது இந்த ரோட்டில் உயிரிழப்பது உறுதி.
எனவே, விரிவாக்கம் செய்வதற்கு, சட்டப்பூர்வமாகவுள்ள தடைகளை உடைத்து, இதனை ஆறு வழிச்சாலையாக்குவதற்கு, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
லோக்சபா தேர்தலுக்கு முன், இதற்கான அறிவிப்பை வெளியிட்டால், அதை கோவை மாவட்ட மக்கள் அமோகமாக வரவேற்பார்கள்!

