/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோல்வியில் துவளக் கூடாது என்கிறார் பெண் விவசாயி
/
தோல்வியில் துவளக் கூடாது என்கிறார் பெண் விவசாயி
ADDED : செப் 07, 2025 08:00 AM

''தோ ல்வியில் துவண்டு விடாமல், விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம்,'' என்கிறார், இயற்கை விவசாயம் செய்து வரும், செம்மேட்டை சேர்ந்த பெண் விவசாயி விஜயா.
46 வயதான இவருக்கு, திருமணமாகி, 2 மகன்கள். இருவரும், பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். கணவர் சுப்பிரமணியன், விவசாயி.
அவரிடம் பேசியதில் இருந்து...
திருமணமானது முதல் எங்களுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்து வருகிறோம். முதலில், குறுகிய கால பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்து வந்தோம். அச்சமயத்தில், பல லட்சம் செலவு செய்தும் விளைச்சல் குறைந்தது. கிடைத்த விளைச்சலுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை. பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மனமுடைந்து நின்றேன். என் கணவர் நம்பிக்கை அளித்தார்.
அரசு மகளிர் சுய உதவி குழுவில் கடனுதவி கிடைத்தது. எனக்கு, விவசாயம் தவிர வேறெந்த தொழிலும் தெரியாது. குழு மூலம் கிடைத்த பணத்தில், மீண்டும், பல வித பயிர்களை சாகுபடி செய்தேன். இம்முறை, ரசாயண மருந்துகள் ஏதுமின்றி, இயற்கை விவசாயம் செய்தேன். நல்ல விளைச்சலும், நல்ல விலையும் கிடைத்தது.
குழு கடனை அடைத்தேன். மீண்டும் ஒரு தொகை கடனாய் கிடைத்தது. அத்தொகையை வைத்து, மாடு வாங்கினேன். சாணம் உரமாய் மாற, நல்ல விளைச்சல் கிடைத்தது. இப்படி படிப்படியாக, குடும்பத்தின் பொருளாதாரம் உயர்ந்தது. மகளிர் சுய உதவி குழு மூலம் தற்போதும், கடனுதவி பெற்று, முறையாக செலுத்தி வருகிறேன்.
கடந்தாண்டு, மத்திய அரசு சார்பில், மஹாராஷ்டிராவில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த, 'லட்சாதிபதி சகோதரி' மாநாட்டில், கோவையில் இருந்து கலந்துகொள்ள தேர்வானேன். அந்த மாநாட்டுக்காக, முதல்முறையாக விமானத்தில் சென்றேன். இச்சம்பவம், என் வாழ்நாளில் மறக்க முடியாததாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் அமைந்தது. கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இருந்தால், யார் வேண்டுமானாலும் வாழ்வில் வெற்றி பெறலாம்,'' என்கிறார் விஜயா.