/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைத்திருவிழா போட்டி; வெளிப்பட்டது தனித்திறன்! பங்கேற்க பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வம்
/
கலைத்திருவிழா போட்டி; வெளிப்பட்டது தனித்திறன்! பங்கேற்க பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வம்
கலைத்திருவிழா போட்டி; வெளிப்பட்டது தனித்திறன்! பங்கேற்க பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வம்
கலைத்திருவிழா போட்டி; வெளிப்பட்டது தனித்திறன்! பங்கேற்க பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : அக் 24, 2024 09:17 PM

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், மூன்றாவது ஆண்டாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான, கலைத்திருவிழா போட்டிகள், வரும், 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
நேற்று, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவியம், களிமண் பொம்மை, மணல் சிற்பம், இசைக்கருவிகள் வாசித்தல், பரதம் மற்றும் கிராமிய நடன போட்டிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் தேன்மொழி போட்டிகளை துவக்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், எடிசன் பெர்னால்டு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். 9 முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு, டி.இ.எல்.சி., பள்ளியில் இன்று (25ம் தேதி) போட்டிகள் நடக்கிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, டி.காளிபாளையம் குறுவள மையம் சார்பாக, ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. அதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புகளுக்கு கதை கூறுதல், மாறுவேடப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், குழு நடனம், களி மண் சிற்பம் செய்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து, வருங்கால தலைமுறையினர் பயன்படுத்திட வேண்டும் என உயர்வான எண்ணத்தை வளர்க்கும் வகையில் இக்கல்வியாண்டில், 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற மைய கருத்தில் போட்டிகள் நடைபெற்றன. முதல் மூன்று இடங்களுக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வால்பாறை
வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா நேற்று துவங்கியது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழா போட்டியை, வட்டார கல்வி அலுவலர்கள் பன்னீர்செல்வம், ரகுபதி ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் வரவேற்றார்.
வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழாவில், நடனம், பாட்டு, ஓவியம், வண்ணம்தீட்டுதல், பேச்சு, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
வால்பாறையில் உள்ள 72 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளை சேர்ந்த, 400 மாணவ, மாணவியர் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
உடுமலை
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் குறுமைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று துவங்கியது. துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், நடனம், பாட்டு, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. குறிப்பிட்ட பத்து பள்ளிகளுக்கு ஒரு மையம் அமைக்கப்பட்டு, போட்டிகள் அந்த மையத்தில் நடக்கிறது.
உடுமலை வட்டாரத்தில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜல்லிபட்டி மற்றும் உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.
குடிமங்கலம் வட்டாரத்தில் கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி, குடிமங்கலம், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போட்டிகள் நடக்கிறது.
உடுமலை ஒன்றியத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இருப்பதால், இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடக்கிறது. குறுமைய அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.
-- நிருபர் குழு -