/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித கார்மெல் அன்னை ஆலய திருவிழா கோலாகலம்
/
புனித கார்மெல் அன்னை ஆலய திருவிழா கோலாகலம்
ADDED : ஜூலை 21, 2025 11:01 PM

போத்தனூர்; கோவை, போத்தனூர் அடுத்த மேட்டூரிலுள்ள புனித கார்மெல் அன்னை ஆலய திருவிழா கடந்த, 13ல் கொடியேற்றம், கூட்டு பாடற் திருப்பலியுடன் துவங்கியது. திருச்சி, தமிழக கார்மெல் சபை முதன்மை ஆலோசகர் சூசைரெத்தினம் தலைமை வகித்தார். போத்தனூர், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஜோசப் சுதாகர் மறையுரையாற்றினார்.
தொடர்ந்து 18ம் தேதி வரை, தினமும் மாலை ஜெபமாலை, கார்மெல் அன்னை புகழ்மாலை, திருப்பலி நடந்தன. திருப்பலிக்கு முன் ஒவ்வொரு அன்பிய மண்டலம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிறைவு நாளன்று காலை, ஆலய உதவி பங்கு தந்தை ஆரோக்கிய எட்வின் தலைமையில் ஆங்கில திருப்பலி நடந்தது. பால் ஆன்டனி மறையுரையாற்றினார்.
தொடர்ந்து, 8:30 மணிக்கு பெருவிழா திருப்பலி, புது நன்மை வழங்குதல் கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடந்தது. மலையாள திருப்பலியை கோவை மறைமாவட்ட ஆயர் இல்ல வக்கீல் வினோத் நடத்தினார்.
மாலை தேர் திருவிழா கூட்டுபாடல் திருப்பலியை, கோவை மறை மாவட்டத்தின் வட்டார முதல்வர் ஆரோக்கிய ஸ்டீபன் நடத்தினார். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், கார்மெல் அன்னை பவனி வர, திரளானோர் பாடல்களை பாடியபடி, ஊர்வலமாக ஜி.டி. டேங்க், ஈஸ்வர் நகர் வரை சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தனர்.
இறுதியாக, ஆலய பங்கு தந்தை றசல் ராஜ் நற்கருணை ஆசீர்வாதத்துடன், கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை பங்குதந்தை றசல்ராஜ், உதவி பங்கு தந்தை ஆரோக்கிய எட்வின் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.