கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளுக்கு... அபராதம் விதிப்பு! காலி எடையை கழித்து கணக்கிட எதிர்பார்ப்பு
கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளுக்கு... அபராதம் விதிப்பு! காலி எடையை கழித்து கணக்கிட எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 17, 2026 04:33 PM
ADDED : ஜூன் 17, 2026 04:10 PM

பொள்ளாச்சி: 'கனிமவளம் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகளில், காலி எடையை கழித்து அதிக பாரம் இருந்தால் அபராதம் விதிக்க வேண்டும். தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 22 கிரஷர், 16 குவாரிகளில் இருந்து டிப்பர் லாரி வாயிலாக, கனிமவளங்கள் உள்ளூர் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இச்சூழலில், அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிப்பதால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொள்ளாச்சி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழக முதல்வர் விஜய்க்கும், வருவாய்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடாஜலபதி கூறியதாவது:
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 150 டிப்பர் லாரிகள் உள்ளன. இந்த டிப்பர் லாரிகளில், நான்கு தாலுகாவில் உள்ள கிரசர், கல்குவாரிகளில் இருந்து கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி, போல்டர் கற்கள் சப்ளை செய்யப்படுகிறது.
முறையாக அனுமதி சீட்டு, நடை சீட்டு, ஜி.எஸ்.டி., பில் மற்றும் கிரசர், கல்குவாரிகளில் இருந்து அரசு அனுமதி அளித்த எடையில் ஏற்றி இறக்கப்படுகிறது. இந்நிலையில், உள்ளூர் வண்டிகளுக்கு, மூன்று யூனிட் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் ஏற்றும் போது, ஈரம் மற்றும் கற்களின் தரத்தை பொறுத்து எடை மாறுபடுகிறது. அந்த எடை, ஒரு டன் முதல், 3 டன் வரை நடைக்கு நடை மாறுகிறது.
இதனால், அதிகாரிகள் பரிசோதனையின் போது, ஓவர் லோடுக்கு, 30 ஆயிரம் ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. உள்ளூர் டிப்பர் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
புதிய டிப்பர் லாரி கம்பெனியில் இருந்து வரும் வாகனத்தில் காலி எடை, 6,500 கிலோவில் இருந்து, 7,500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, பரிசோதனையின் போது வாகனத்தின் மொத்த எடையை கணக்கிடாமல், வாகனத்தின் காலி எடையை கழித்து அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும், டிப்பர் லாரியின், 18,500 கிலோ என்ற எடையை, 23 ஆயிரம் கிலோவாக மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து வலியுறுத்தினோம். தமிழக முதல்வருக்கும் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
