/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைரேகை பதிவாவது இல்லை; ரேஷன் கடைகளில் மக்கள் அவதி
/
கைரேகை பதிவாவது இல்லை; ரேஷன் கடைகளில் மக்கள் அவதி
ADDED : ஆக 06, 2025 09:10 PM
சூலுார்; பெரும்பாலானோருக்கு கைரேகை பதிவாகாததால், ரேஷன் கடைகளில் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் தாலுகாவில், முழு நேரம் மற்றும் பகுதி நேர கடைகள் என, 153 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில், பி.ஓ.எஸ்.,மெஷின் வாயிலாக, கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சூலுார் வட்டாரத்தில் பல கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கார்டுதாரர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கார்டுதாரர்கள் கூறுகையில்,' எந்த விரலை வைத்தாலும் கைரேகை விழுவதில்லை. இதனால், பலரும் ஏமாற்றம் அடைவதால், ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. நெட்வொர்க், சர்வர் பிரச்னை என்று பல காரணங்களை கூறுகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டு, தடையில்லாமல் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதுகுறித்து கடை ஊழியர்கள் கூறுகையில்,' தராசுடன் பி.ஓ.எஸ்., மெஷினை இணைத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனித்தனியாக பில் போடுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்னையால் கைரேகை பதிவாவது இல்லை. அதனால், கார்டுதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்,' என்றனர்.