/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுவதால் பற்றும் தீ! உப்பிலிபாளையம் பிருந்தாவன் காலனியில் ஆபத்து
/
மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுவதால் பற்றும் தீ! உப்பிலிபாளையம் பிருந்தாவன் காலனியில் ஆபத்து
மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுவதால் பற்றும் தீ! உப்பிலிபாளையம் பிருந்தாவன் காலனியில் ஆபத்து
மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுவதால் பற்றும் தீ! உப்பிலிபாளையம் பிருந்தாவன் காலனியில் ஆபத்து
ADDED : மார் 18, 2025 05:24 AM

சாலையோர மண்ணால் இடையூறு
இ.எஸ்.ஐ., ரோடு எதிரே, தாமரா ஓட்டல் - மசக்காளிபாளையம் சாலையோரத்தில் அதிகளவு மண் குவிந்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழைக்காலத்தில் பெரும் இடையூறாக உள்ளது. மண் குவியலை அகற்ற வேண்டும்.
- பாரதி, இடையர்பாளையம்.
துரத்தும் நாய்கள்
ரத்தினபுரி, அருள் மாரியம்மன் கோவில் அருகே ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரையும், பைக்கில் செல்வோரையும் துரத்தி அச்சுறுத்துகிறது. குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், ரத்தினபுரி.
தார் சாலை வேண்டும்
இடையர்பாளையம், சீனிவாச நகரில், மண் சாலையில் மழை தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. நடக்கவும், வாகனங்களை இயக்கவும் மிகவும் சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் வழுக்கி கிழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். இப்பகுதியில், தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக் கணேசன், இடையர்பாளையம்.
கிளையில் உரசும் மின்ஒயர்
உப்பிலிபாளையம், 60வது வார்டு, பிருந்தாவன் காலனியில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. அருகிலுள்ள பெரிய மரத்தின் கிளைகள் மின் ஒயர்களில் உரசியபடி உள்ளதால், மழைக்காலங்களில் அடிக்கடி மின் பாதிப்பு ஏற்படுகிறது. மின்விபத்து ஏற்படும் முன் கிளைகளை அகற்ற வேண்டும்.
- கோபாலன், உப்பிலிபாளையம்.
இருளால் விலகாத அச்சம்
கோவை மாநகராட்சி, 24வது வார்டு, வினோபாஜி நகரில் தானியங்கி முறையில் செயல்படும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி கருவி பழுதால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரத்தில், வெளியே செல்லவே பாதுகாப்பில்லை.
- சந்தோஷ், வினோபஜி நகர்.
தண்ணீரின்றி தவிப்பு
மாநகராட்சி, 15வது வார்டு, சுவாதி கார்டனில் கடந்த பிப்.,27ம் தேதிக்கு பிறகு இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. பாதாள சாக்கடை பணியின் போது குழாய் திட்ட கேட் வால்வு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. தண்ணீரின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- ராஜேந்திர பாரதி, சுவாதி கார்டன்.
மூச்சை முட்டும் கரும்புகை
சிங்காநல்லுார், ஹவுசிங் யூனிட்டில் சில சிதிலமடைந்த வீடுகள் இடிக்கப்பட்டன. இந்நிலையில் நபர் ஒருவர் கட்டடங்களின் பழைய மின் ஒயர்களிலிருந்து, காப்பர் கம்பியை பெறுவதற்காக, குடியிருப்பு நடுவே ஒயர்களை எரிக்கிறார். இதனால் வெளிவரும் நச்சுப்புகையால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தங்கவேல், சிங்காநல்லுார்.
பயன்படுத்த முடியாத சாலை
சுண்டக்காமுத்தார், குறிஞ்சி நகரில் தார் சாலை அமைத்து தர, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கையில்லை. மண் சாலையை மழைக்காலங்களில் பயன்படுத்தவே முடியவில்லை. தினந்தோறும் விபத்துகள் நடப்பதால், விரைந்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.
- தனலட்சுமி, குறிஞ்சி நகர்.
சேதமடைந்த கம்பம்
ராமநாதபுரத்தில், சாவித்திரி நகரில், மின்கம்பம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. கம்பம் விழுந்தால், பெரும் விபத்து ஏற்படும். சேதமடைந்த கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.
- மோகன்குமார், ராமநாதபுரம்.
நீர் நிரம்பிய குழியால் அச்சம்
நல்லாம்பாளையம், விஜயா நகரில் சாக்கடை பணிக்காக குடிநீர் குழாய்கள், கழிவுநீர் வடிகால்களை உடைத்தனர். இதனால், பெருமளவு தண்ணீர் வீணாகிறது. சாலையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள், பெரியவர்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளது.
- சுருதி, விஜயா நகர்.
யார் தலையில் விழுமோ?
ஆர்.எஸ்.புரம், வெங்கடசாமி ரோடு, விக்ரம் இ.என்.டி., மருத்துவமனை எதிரே பெரிய மரத்தின் கிளைகள் உடைந்து சாலையில் தொங்கியபடி உள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. பாதசாரிகள் மீது ஒடிந்து விழுவதற்கும் வாய்ப்புள்ளது.
- வெங்கட், ஆர்.எஸ்.புரம்.
வாகன ஓட்டிகள் அவதி
ரேஸ்கோர்ஸ், பிஷப் அப்பாசாமி கல்லுாரி சாலையில், தண்ணீர் குழாய் பராமரிப்பு பணிக்காக சாலையின் மத்தியில் தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாமல் உள்ளது. சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- பாலா, ரேஸ்கோர்ஸ்.
சாக்கடைக்குள் குடிநீர் குழாய்
கோவை மாநகராட்சி, 82வது வார்டில், ரத்தினம் வீதி லேன் இரண்டில், குடிநீர் குழாய் பாதாள சாக்கடை வழியே செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குழாயில் ஏதேனும் சிறிய உடைப்பு ஏற்பட்டாலும் கழிவுநீர், குடிநீரில் கலக்க வாய்ப்புள்ளது. இதனால், நோய்கள் பரவும் அபாயம் ஏற்படவும், மக்கள் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
- பிரகாஷ் குமார், ரத்தினம் வீதி.
பஸ்களை இயக்குவதில் சிக்கல்
நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறுகலாக உள்ள இச்சாலையில், பஸ்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் இயக்குவது சிரமமாக உள்ளது.
- சுப்ரமணி, புதுப்பாளையம்.